Fact Check: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8,500 வழங்கப்படும் என்று கூறினாரா ராகுல் காந்தி?

வேலையின்றி சமூக வலைதளங்களில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8,500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  22 April 2024 7:04 PM GMT
Fact Check: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8,500 வழங்கப்படும் என்று கூறினாரா ராகுல் காந்தி?
Claim: வேலையின்றி சமூக வலைதள பக்கங்களில் நேரத்தை செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8500 வழங்கப்படும் என்று கூறிய ராகுல் காந்தி
Fact: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தொழிற்பயிற்சி உரிமைச் சட்டம் குறித்து ராகுல் காந்தி விளக்கிய காணொலியை தவறாக பரப்பி வருகின்றனர்

“வேலை இல்லாமல் facebook instagram இல் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் மாதம் ₹8500 வழங்கப்படும்” என்று ராகுல் காந்தி கூறியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வலதுசாரியினரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், இந்தியில் பேசும் ராகுல் காந்தி, “இப்போது தெருக்களில் அலைந்து திரியும் நம் இளைஞர்கள்... இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என்று உலாவுகிறார்கள்... அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுத்தொகையாக ரூபாய் 1 லட்சம் (மாத வருமானம் ரூபாய் 8500) வரவு வைக்கப்படும்” என்று கூறுகிறார்.

வைரலாகும் காணொலி

Fact-check:

இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, The Economic Times தனது யூடியூப் சேனலில் இன்று(ஏப்ரல் 22) இது தொடர்பாக காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன் டிஷ்கிரிப்ஷனில் “பிகார் மாநிலம் பாகல்பூரில் இந்தியா கூட்டணிக்கு வாக்கு சேகரித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, 2024ல் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8500 சம்பளத்துடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் மாதம் ரூ. 8,500 வழங்கப்படும் என்று கூறினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி தொழிற்பயிற்சி குறித்து பேசியது முதற்கட்டமாக தெரிய வருகிறது.

மேலும், கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் தேடுகையில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பாகல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் நேரலை காட்சி ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், மோடியின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பின்மை குறித்து பேசும் ராகுல் காந்தி. தொடர்ச்சியாக, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தொழிற்பயிற்சி உரிமைச் சட்டம் குறித்து பேசுகிறார்.

அப்போது, 10:59 பகுதியில் காங்கிரஸின் தொழிற்பயிற்சி திட்டம் குறித்து பேசத்துவங்குகிறார். தொடர்ந்து, 12:40 முதல் 12:57 வரையிலான பகுதியில், “வேலைக்கான உரிமை என்பது அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் ஒரு வருட தொழிற்பயிற்சி பெறுவார்கள். ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்(மாதம் ரூபாய் 8,500). அவர்கள் பயிற்சி பெற்ற முதல் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

இங்கு பெறப்பட்ட தொழிற்பயிற்சியைக் கொண்டு தனியார், பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். இதன் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள், இந்தியாவுக்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் கிடைப்பார்கள். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என இப்போது தெருத் தெருவாக அலைந்து திரியும் நமது இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம், மாதம் ரூபாய் 8500 நமது அரசாங்கத்தால் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்” என்று கூறுகிறார். இவ்வாறாக ராகுல் காந்தி பேசும் பகுதியை மட்டும் தனியாக பரப்பி வருகின்றனர்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தொழிற்பயிற்சி உரிமைச் சட்டம் குறித்து ராகுல் காந்தி பீகாரில் பேசிய காணொலியை, வேலையின்றி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8,500 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியதாக தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கில் நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8,500 வழங்கப்படும் என்று கூறிய ராகுல் காந்தி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Next Story