Fact Check: அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவருக்கு தனி ராமர் சிலை காண்பிக்கப்பட்டதா? உண்மை என்ன?

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு தனி ராமர் சிலை காண்பிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  6 May 2024 7:19 PM GMT
Fact Check: அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவருக்கு தனி ராமர் சிலை காண்பிக்கப்பட்டதா? உண்மை என்ன?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த மே 1ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்நிலையில், “தாழ்த்தப்பட்டவர்கள் என்று பிரித்து விட்டு அவர்களுக்கு எந்த பதவி தருகிறீர்கள் என்பது முக்கியமில்லை அவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம்.. மூல விக்ரகத்தை மறைத்து துணி எழுப்பி இவருக்காக தனியாக வேறொரு ராம் லால்லா சிலை… இதெல்லாம் பண்ணீங்க சரி ராமருக்கு ஏன்டா பட்டையை போட்டு விட்டீங்க (கொண்டைய மறைங்கடா பாடிசோடாக்களா)” என்ற கேப்ஷனுடன் அயோத்தி ராமர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழிபடும் காணொலி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கென்று தனி ராமர் சிலை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதாக கூறி காணொலியை பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் காணொலி

Fact-check:

இதன் உண்மை தன்மையை கண்டறிய அயோத்தி ராமர் கோயில் தொடர்பான காணொலிகளை ஆய்வு செய்தோம். அதன்படி முதலில் நேற்று(மே 5) பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று ராமரை வழிபட்டார். அக்காணொலியில் இருக்கும் ராமர் சிலையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றபோது இருந்த ராமர் சிலையையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, கடந்த ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, குடியரசுத் தலைவர் இருக்கும் காணொலியில் உள்ள அதே தங்க நிற கதவு ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியின் அருகில் இருப்பது தெரிய வந்தது. மேலும், ராமர் சிலைக்கு பின்புறமாக இருக்கும் வெள்ளை நிற சுவரும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதை நம்மால் காண முடிந்தது.


ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்போது, மூன்று அடுக்குகளுடன் அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த மூன்று அடுக்கும் கும்பாபிஷேக காணொலியிலும் குடியரசுத் தலைவரின் காணொலியிலும் ஒன்றாகவே உள்ளது.


மேலும், வைரலாகும் காணொலியில் ராமர் சிலைக்கு பின்னால் இருக்கும் சிவப்பு நிற திரை சமீபத்தில் ராம நவமியின்போது ராமர் கோயிலில் நிகழ்ந்த ‘சூரிய திலகம்’ நிகழ்வு தொடர்பான காணொலியில் இருப்பது தெரியவந்தது.


Conclusion:

நம் தேடலில் முடிவாக வைரலாகும் காணொலியையும் இணையத்தில் உள்ள பிற காணொலிகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரு ராமர் சிலையும் ஒன்றுதான் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அயோத்தி ராமர் கோயிலில் தனி ராமர் சிலை காண்பிக்கப்பட்டதாக வைரலாகும் காணொலி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Next Story