நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று, "விஜய்-சங்கீதா குடும்பத்தில் அணுகுண்டை வீசிய கடைசி புகைப்படம்" என்று சமூக வலைதளங்களில் புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய விரிவான ஆய்வை மேற்கொண்டோம். அந்த புகைப்படத்தை உன்னிப்பாக கவனித்தபோது, அதில் உள்ள உருவ அமைப்புகள் மற்றும் ஒளியமைப்பு இயற்கைக்கு மாறாக இருப்பதை உணர முடிந்தது.
முதலில், வைரலாகும் இந்த புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தால் (AI) உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறியும் Hive Moderation இணையதளத்தில் பதிவேற்றி ஆராய்ந்தோம். அப்போது, குறிப்பிட்ட புகைப்படம் 99.9% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது திட்டவட்டமாக உறுதியானது.
இதனை மேலும் உறுதிப்படுத்த Wasitai தளத்தைப் பயன்படுத்தியபோதும், இது மனிதர்களால் எடுக்கப்பட்டதல்ல, மாறாக செயற்கை நுண்ணறிவால் வடிவமைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், இந்த புகைப்படம் கடந்த பிப்ரவரி 26, 2026 அன்று "Naga Chaitanya Fans Club" என்ற பெயரிலான ஃபேஸ்புக் பக்கத்தில் முதலில் பதிவேற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அந்தப் பக்கத்திலேயே இது ஒரு AI உருவாக்கிய கற்பனைப் படம் என்ற தலைப்பின் கீழ்தான் இடம்பெற்றுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள சூழலில், பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த இத்தகைய போலிப் படங்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன.
Conclusion:
முடிவாக நம் தேடலில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், சங்கீதா-விஜய் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் விஜய்-திரிஷா செல்ஃபி புகைப்படம் முற்றிலும் போலியானது என்பதும், அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைப் படம் என்பதும் தெளிவாகியுள்ளது.