2025ஆம் ஆண்டு மக்களை குழப்பிய AI காணொலிகள்!
மக்கள் மத்தியில் பெருகிய AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு கடந்த 2025ஆம் ஆண்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி ஏமாறவும் செய்தது
By Newsmeter Network
கடந்த சில ஆண்டுகளாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. அதன் பயன்பாடு மக்கள் மத்தியில் இன்றியமையாத ஒன்றாக மாறி வருகிறது. Chat GPT, Gemini, Perplexity போன்ற பல்வேறு வகையான சேட் பாட்கள் மக்களின் பல்வேறு வகையான பணிகளை எளிமையாக்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படக்கூடிய புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சிலர் இதனை கல்வி, விழிப்புணர்வு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு நற்காரணங்களுக்கு பயன்படுத்தினாலும், சில சமூக விரோதிகள் AI ஜெனரேட்டட் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
உதாரணத்திற்கு நாட்டின் தலைவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு நபர்களுடைய உருவங்களை டீப்பேக் உதவியுடன் தவறாக சித்தரித்து மலிவான தகவல்களை பரப்புவதற்கு பயன்படுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டி பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயச்சங்கர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டதாக சமூக வலைதளங்களில் ஒரு காணொலி வைரலானது. ஆனால், காணொலியை ஆய்வு செய்த பேக்ட் செக் நிறுவனங்கள் அது டீப்பேக் உதவியால் உருவாக்கப்பட்டது என்ற கூறின.
இதேபோன்று, பிரதமர் மோடி மற்றும் இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் தனியார் நிதி முதலீட்டு நிறுவனம் தொடர்பான ப்ரோமோஷன் காணொலிகளை டீப்பேக் உதவியுடன் சில தனியார் விளம்பர நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன. இதனை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்தனர்.
மேலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நிதி முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதாக பொய்யாகக் காட்டும் ஒரு டீப்பேக் வீடியோ ஆன்லைனில் வெளியானது. இதனை அடுத்து பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. சில வாரங்களுக்குப் பிறகு, நிதியமைச்சர் இதுபோன்ற மோசடி காணொலி குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.
அதேபோன்று, “தான் ஒரு முஸ்லிம், ஆனால் பயங்கரவாதி அல்ல” என்றும், “பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை” என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி கூறுவது போன்ற வைரலான காணொலியும் டீப்பேக் என்று நிரூபிக்கப்பட்டது.
குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் இணைந்து 'ஆபரேஷன் சிந்துர்' குறித்து செய்தியாளர் சந்திப்புகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானை அழித்துவிடுவேன் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று உண்மை என பகிரப்பட்டது. ஆனால், அதனை ஆய்வு செய்த ஃபேக்ட்செக் ஊடகங்கள் வைரலாகும் காணொலியில் உள்ள அவரது ஆடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும், 2016ஆம் ஆண்டு அவர் உண்மையாக பேசிய காணொலியை தவறாக திரித்து பரப்பி வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி ட்ரம்பின் உருவம் கொண்ட டீப்பேக் காணொலியை பயன்படுத்தி Trump Hotel Rental என்ற செயலியை உருவாக்கி கர்நாடகாவில் கிட்டத்தட்ட 200 நபர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட ரூபாய் 2 கோடி பறித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் கடந்த மே 27ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. இச்செயலியில் அவர்கள் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் நூறு சதவீதம் வருமானம் ஈட்டக்கூடிய வகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசக்கூடிதாக டீப்பேக் காணொலியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
சமீபத்திய Google Veo, Nano Banana போன்ற AI தொழில்நுட்பங்கள் போட்டோ ரியாலிஸ்டிக் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை தத்துருவமாக உருவாக்கித் தரவல்லது. என்னதான் இந்த தொழில்நுட்பங்கள் ஒருபுறம் வளர்ந்தாலும், AI புகைப்படம் அல்லது காணொலி தான் என்பதை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு தளங்களும் இயங்கி வருகின்றன. Hive Moderation, DeepFake-O-Meter, WasItAI மற்றும் கூகுளின் சமீபத்திய கண்டுபிடிப்பான Synth ID போன்ற தளங்கள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை ஆராய்ந்து, அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவையா இல்லையா என்பதை கண்டறிந்து நமக்கு விரிவான விளக்கத்தை தருகின்றன.
ஒரு பக்கம் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், மறுபுறம் அதனை தவறாக பயன்படுத்தக்கூடிய நபர்கள் தற்போது வரையிலும் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனியார் நிறுவனங்களை தாண் Deepfake Analysis Unit என்பது போன்ற ஒரு ஊடக கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட டீப்பேக் காணொலிகளை ஆய்வு செய்யக்கூடிய ஒரு அலகு தனியாக இயங்கி வருகிறது. இதில் நியூஸ் மீட்டரும் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தனிப்பட்ட முறையில் டீப்பேக் காணொலிகளை மற்றும் ஆடியோக்களை ஆராய்ந்து அவற்றின் விரிவான முடிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு டீப்பேக் மற்றும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.