பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள்(மே 30 முதல் ஜூன் 2 வரை) தொடர்ந்து தியானம் செய்தார். இந்நிலையில், “இனிமே கருப்பு பலூன் எல்லாம் விட முடியாது Only மோடி பலூன் தான் - MODI AGAIN. 400 PAAR ...... MODI SARKAR” என்ற கேப்ஷனுடன் புகைப்படம் மற்றும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தின் மேலே “MODI AGAIN” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஆகாய கப்பல்கள் பறப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய இந்நிகழ்வு தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காணொலி உண்மைதானா என்பதை கண்டறிய அதனை ஆய்வு செய்தோம். அப்போது ஆகாய கப்பல்களின் நிழல் கீழே உள்ள மண்டபத்தின் மீது விழுகவில்லை என்பது தெரிய வந்தது.
ஆகாய கப்பலின் நிழல் விழுகவில்லை
மேலும், இதே போன்று “Welcome to Nilgiris” என்று எழுதப்பட்டிருந்த ஆகாய கப்பல்கள் மலை மேல் பறப்பது போன்ற காணொலியை அமைச்சர் எல். முருகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோன்று, தாமரை சின்னம் மற்றும் “L Murugan for Nilgiris” என்ற வாசகம் ஆகாயத்தில் பறப்பது போன்ற காணொலியையும் அவரே பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வைரலாகும் காணொலியும் இதேபோன்று கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
கன்னியாகுமரியில் இவ்வாறான நிகழ்வு நடைபெற்றதா என்று அப்பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளரிடம் விசாரித்தோம். அதற்கு, “கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தேர்தல் நாளுக்கு முன்பு வடசேரி பேருந்து நிலையத்தில் ஹீலியம் பலூனை பறக்கவிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடந்தது என்றும் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற நிகழ்வு கன்னியாகுமரியில் எங்கும் நடைபெறவில்லை” என்றும் கூறினார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக விவேகானந்தர் மண்டபத்தின் மேலே "MODI AGAIN" என்று வாசகம் பொறிக்கப்பட்ட ஆகாய கப்பல்கள் பறக்க விடப்பட்டதாக வைரலாகும் காணொலி கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்றும் அவ்வாறான ஒரு நிகழ்வு அங்கு நடைபெறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.