“இந்தியாவிடம் இருந்து 110 அடி நீளமுள்ள 10 பாலங்கள் விமானம் வழியாக இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன..!!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இந்தியாவில் இருந்து விமானங்கள் மூலம் பாலங்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டதா என்பதைப் பற்றி ஆராய்ந்தோம். அந்தத் தேடலில், தினமணி நாளிதழில், வெளியான செய்தி கிடைத்தது. அதில், இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பெய்லி (Bailey) வகை நகரும் பால அமைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சி-17 குளோப் மாஸ்டர் (C-17 Globemaster) விமானம் மூலமாக அனுப்பப்பட்டதாக இந்தியத் தூதரகம் அறிவித்திருந்தது. இந்தப் பாலத்தை உடனடியாக நிறுவுவதற்காக, பொறியாளர்கள் உட்பட 22 நிபுணர்கள் குழு இந்தியாவில் இருந்து இலங்கை சென்றதாகவும் தூதரகம் தகவல் தெரிவித்தது.
இவ்வாறு பெய்லி பாலத்தின் பாகங்கள் விமானம் வழியாகக் கொண்டுவரப்பட்டது உண்மைதான் என்றாலும், சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்று கொண்டுவரப்படவில்லை என்பதை கண்டறிந்தோம்.
எனவே, இக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய முதலில் அதனை ஆராய்ந்து பார்த்தபோது, அதன் கீழ் பகுதியில் Veo என்று குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. Veo என்பது AI காணொலிகளை உருவாக்கக்கூடிய கூகுளின் AI மாடல். இதனைக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளியில் தான் Veo என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
Conclusion:
எனவே, இலங்கையில் சேதமடைந்த பாலங்களைப் புதுப்பிப்பதற்காக இந்தியாவில் இருந்து பெய்லி பாலங்களுக்கான உதிரிபாகங்கள் கொண்டுவரப்பட்டது என்பது உண்மையான தகவல். ஆனால், இணையத்தில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.