தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த பேருந்து தாக்கப்பட்டதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு பேருந்தை சுற்றி பலர் வாக்குவாதம் செய்வதும், கல்லெறியும் காட்சிகள் இந்த காணொளியில் உள்ளது. ஸ்டாலின் ஆட்சி செய்யும் தமிழ் நாட்டில் இஸ்லாமியர்கள் ஐயப்ப பக்தர்களை தாக்குவதாக இந்த காணொலி பரப்பப்படுகிறது.
இசுலாமியர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் இந்த காணொளி பரப்பப்படுகிறது. ‘இது வங்க தேசத்தில் அல்ல, இந்தியாவில், தமிழ்நாட்டில். டூரிஸ்ட் வாகனத்தில் ஐயப்ப பக்தி பாடல்களை இசைத்துக் கொண்டு சபரிமலை நோக்கி பயணித்ததற்க்காக அமைதி மார்க்கத்தை சார்ந்த மதத்தை சேர்தவர்கள் தாக்குதல் நடத்தும் காட்சி. கேரளாவைப் போல அங்கும் ஆளும் அரசு (ஸ்டாலின்) அவர்களுக்கு சாதகமானது. அந்த திமிரில் தான் இவ்வாறு செய்கிறார்கள்’ என அந்த பதிவில் இஸ்லாமியர்களுக்கு விரோதமாக கருத்து பதியப்பட்டுள்ளது.
Fact Check:
இந்த தகவல் தவறானது. பரப்பப்படும் காணொலி ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது என்பதை நிரூபிக்க முடிகிறது.
வைரலாக பரவும் காணொலியின் ப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்ததில் இது ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றதாக வெளியான செய்திகளை கண்டறிய முடிந்தது. இதனடிப்படையில் கீவேர்டு சர்ச் செய்து பார்த்த போது ஜீ நியூஸ் யூடியூப் தளத்தில் பகிரப்பட்ட காணொலி செய்தி கிடைக்கப்பெற்றது.
ஆந்திர மாநிலம் ராயசோட்டி என்னும் இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அச்செய்தியின் வாயிலாக அறிய முடிகிறது. ஐயப்ப பக்தர்கள் பயணித்த பேருந்தில் பக்தி பாடல்கள் கேட்பதில் உருவான தகராறின் பின்னணியில் இந்த கல் வீச்சு சம்பவம் நடந்ததாக தெரிவிக்கும் செய்தியை கீழே காணலாம்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தின் ராயசோட்டி என்னும் இடத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தின் செய்தி டி.வி9 தெலுங்கு தொலைக்காட்சியும் ஒளிபரப்பியுள்ளது. 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தியதி இரவில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் மறுநாள் காலை ஐயப்ப பக்தர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்திய செய்தியும் ஒளிபரப்பாகியுள்ளது.
இதர தெலுங்கு செய்தி தொலைக்காட்சிகளானகடப்பா செய்தி தொலைக்காட்சி, ரிபப்ளிக் டிவி ஆகிய ஊடகங்களும் இந்த சம்பவம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளன. இது குறித்து வெளியான அனைத்து செய்திகளிலும் இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்ததாக தெளிவாக தெரிவிக்கினறன. நமது தேடலில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடந்ததாக பரவும் செய்தி தவறானது என்றும், இது உண்மையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடந்தது எனவும் நிரூபிக்க முடிகிறது.