சாதிய அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து அவமானப்படுத்திய ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தகவல் அனைவருக்கும் போய் சேரும் வரை பகிருங்கள் என்று திருமாவளவன் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.
திமுகவின் கூட்டணி கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது. இந்நிலையில், சாதியக் காரணத்தால் திருமாவளவனை திமுக தலைவர் ஸ்டாலின் அவமானப்படுத்தியதாக பரப்பப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2018ஆம் ஆண்டு ஜூலை 26ம் தேதி மாலைமலர் இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது.
அது திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க அரசியல் தலைவர்கள் வருகை தந்தது குறித்த செய்தி. அதில் இடம்பெற்ற புகைப்படத்தில், ஸ்டாலின் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அமர்ந்து பேசுவது தெரிகிறது. அவர்களுடன் டி.ஆர்.பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் உள்ளனர்.
இரு புகைப்படங்களின் ஒப்பீடு
2018ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். அப்பொழுது, கமல்ஹாசன் மற்றும் திருமாவளவன் ஆகியோரும் வந்துள்ளனர். அதில், கமல்ஹாசன் ஸ்டாலினை சந்தித்த புகைப்படத்தில் திருமாவளவன் தரையில் அமர்ந்து இருப்பது போன்று எடிட் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
Conclusion:
நமது தேடலில் , சாதிய காரணத்தால் திருமாவளவனை இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து ஸ்டாலின் அவமானப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.