முதல்வர் ஸ்டாலின் பெண்களை தாலி அணிய வேண்டாம் என்று கூறியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்
வலைதளங்களில் (Archive) பரவி வருகிறது. அதில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி முன்பு, பெண்கள் சிலர் தங்களது தாலியை அகற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி திராவிட கழகம் ஏற்பாடு செய்த தாலி அகற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது.
பரவி வரும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது, தெலுங்கு ஊடகமான Shakshi TVயில் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் திராவிடர் கழகத்தினர் பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.
மேலும், BBC Tamil ஊடகத்தில் ஏப்ரல் 2015ஆம் ஆண்டு செய்தி வெளியாகியிருந்தது. அதில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஏப்ரல் 14 தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிஹோத்ரி, எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக அதிகாலையிலேயே இந்த மனு விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெறும் முன்பாகவேது, தாலி அகற்றும் விழா ஏழு மணிக்கே துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த அந்த விழாவில் பங்கேற்று 21 பெண்கள் தங்கள் தாலிகளை அகற்றினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக, கடந்த 2015ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தினர் பெரியார் திடலில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய காணொலியை, முதல்வர் ஸ்டாலின் பெண்களை தாலி அணிய வேண்டாம் என்று கூறியதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று தெரியவந்தது.