பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 70 இடங்களில் 48 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 10 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டும் பெற்றது. தொடர்ச்சியான மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
வாக்கு சதவீதத்தை பொருத்தவரையில் பாஜக 45.56% பெற்று கடந்த தேர்தலை விட சராசரியாக 7 சதவீத புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சுமார் 10% புள்ளிகளை இழந்து 2020 தேர்தலில் பெற்ற 53.57% வாக்குகளில் இருந்து 43.57% என்னும் அளவுக்கு சரிந்துள்ளது ஆனால் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற 4.3% வாக்குகளில் இருந்து சுமால் 2% அதிகமாக 6.34% வாக்குகளை பெற்றுள்ளது.
இந்த சூழலில் மேளதாளங்களுக்கு, தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் காங்கிரஸ் தலைவர்கள் நடனம் ஆடுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
X தளத்தில் வீடியோவை பதிவிட்டு ஒரு பயனாளர் ‘டெல்லி தேர்தலில் எந்த இடங்களையும் வெற்றி பெறா விட்டாலும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது’ என பகிர்ந்துள்ளார். (Archive)
மற்றொரு பயனர், கடந்த தேர்தலை போல் இப்போதும் எந்த இடங்களையும் பெறாத காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது என பதிவிட்டுள்ளார். (Archive)
Newsmeter நடத்திய ஆய்வில் இந்த வீடியோ தேர்தல் முடிவுகள் வெளியான பிப்ரவரி 8ஆம் தேதிக்கு முன்னரே சமூக வலைதளங்களில் உள்ளதாக கண்டறிய முடிந்தது.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராதிகா கேரா ஜனவரி 24ஆம் தேதி பகிர்ந்த பதிவுகளை மேற்குறிப்பிட்ட இரண்டு பயனாளர்களும் தற்போது பகிர்ந்துள்ளனர்.
அதேபோல் ஜனவரி 23ஆம் தேதி X தளத்தில் ஒரு பயனாளர் இதை வீடியோவை பகிர்ந்து டெல்லி தேர்தலுக்கான பாடலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டதாக பகிர்ந்துள்ளார்.
News24 செய்தி நிறுவனம் ஜனவரி 23ஆம் தேதி பதிந்த காணொளியில் டெல்லி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலுக்காக பாடலை வெளியில் விட்டு தலைவர்கள் உற்சாகமாக நடனமாடியதாக பகிர்ந்துள்ளது.
NDTV செய்தி நிறுவனமும் ஜனவரி 23ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாடும் செய்தியை பகிர்ந்து உள்ளதை கண்டறிய முடிந்தது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகள் காங்கிரஸ் தலைவர்களான பவன் கேர் பிஹார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் செய்தி தொடர்பாளர் ராகினி நாயக் ஆகியோர் பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாடியதாக தெரிவித்துள்ளார். அதே செய்தியில் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடனமாடுவது இதுவே முதல்முறை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நடனமாடுவதாக பகிரப்படும் செய்தி தவறானது என நிரூபிக்க முடிகிறது.