Fact Check: பாதுகாப்பு அதிகாரிகள் மீது செருப்பை வீசினார்களா கும்பமேளா பக்தர்கள்? உண்மை அறியலாம்
கும்பமேளாவின் பக்தர்கள் பாதுகாப்பு பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இணையதளங்களில் ஒரு வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.
By Neelambaran A Published on 15 Feb 2025 10:30 AM IST
Claim: கும்ப மேளா பக்தர்கள் துணை ராணுவ படையினரை செருப்புகளை வீசி தாக்கினர்
Fact: பரவும் தகவல் தவறானது. இது புஷ்பா 2 திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்வில் நடைபெற்றது
துணை ராணுவப்படை காவலர்கள் ஒரு பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதாகவும் அவர்கள் மீது செருப்புகள் வீசி தாக்கப்படுவதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தேசபக்தர்களும் சனாதனவாதிகளும் ராணுவ வீரர்கள் மீது கும்பமேளாவின் செருப்புகளை வீசி தாக்குகின்றனர். இதுவே இஸ்லாமியர்களால் செய்யப்பட்டிருந்தால் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கும். ஆனால் இந்த மதத்தை சார்ந்தவர்கள் இந்த செயல்களை செய்யும் நிலை உள்ளது,” என X தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Fact Check:
நியூஸ் மீட்டர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தவறானது என கண்டறியப்பட்டது நவம்பர் 17 2024 அன்று புஷ்பா 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வின்போது இந்த செருப்பு வீச்சு சம்பவம் நடைபெற்றதாக அறிய முடிந்தது.
பரப்பப்படும் வீடியோவை பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தபோது ஜனவரி 3, 2025 அன்று யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு முழுமையான வீடியோவை கண்டறிய முடிந்தது. ஒரு துணை ராணுவப்படை வீரர் தனது சீருடை உடன் கூட்டத்தை கட்டுப்படுத்த இரும்பு தடுப்புகளுக்கு மேலே ஏறி முயற்சி செய்வது இந்த முழுமையான வீடியோவில் காண முடிகிறது.
இணையத்தில் பரவும் வீடியோவிலும் நம் தேடலில் கிடைத்த முழுமையான வீடியோவில் ஒரு சிவப்புக் கொடியும் அதில் மஞ்சள் நிறத்திலான அடையாளமும், அவை பல நபர்களால் அதைக் கூட்டத்தில் பயன்படுத்தப்படுவதை காண முடிகிறது.
இந்தக் கொடிகள் புஷ்பா 2 திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கொடிகள் என்பது டிசம்பர் 5, 2024 தேதியில் அவை பயன்படுத்தப்பட்டது அறிய முடிகிறது.
மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த கொடியும் அதன் வடிவமைப்பும் நவம்பர் 17 அன்று பதிவிடப்பட்டுள்ளது தெளிவாக காணப்படுகிறது. பீகார் மாநிலம், பாட்னாவில் அமைந்துள்ள காந்தி மைதானத்தில் புஷ்பா 2 ட்ரைலர் வெளியீடு நிகழ்வு நடைபெற்றதாகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வீடியோவை வேறொரு இன்ஸ்டாகிராம் பயனாளர் நவம்பர் 17 அன்று அதே பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வு என பதிவு செய்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட தரவுகளுடன் கீவேர்ட் சர்ச் செய்து பார்க்க போது Hindustan Times பத்திரிகையின் அதிகாரப்பூர்வ X தளத்தில் இதே வீடியோ நவம்பர் 17, 2024 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் துணை ராணுவ படையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்வதையும் சிவப்பு கொடிகளையும் காண முடிகிறது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ரேஷ்மிகா மந்தானா ஆகியோரை காண்பதற்காக பெரும் கூட்டம் கூடியதாகவும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
#WATCH | A massive crowd gathers at Gandhi Maidan in #Patna to catch a glimpse of #AlluArjun and #RashmikaMandanna at the trailer launch event of 'Pushpa 2: The Rule'
— Hindustan Times (@htTweets) November 17, 2024
(📽️: ANI) pic.twitter.com/jzACifR6OI
Brut India செய்தி நிறுவனம் நவம்பர் 18, 2024 அன்று புஷ்பா 2 ட்ரைலர் வெளியீட்டில் குழப்பம் ஏற்படுத்திய பெரும் கூட்டம் என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் படி காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவிலும் துணை ராணுவ படையினர் இரும்பு தடுப்புகளில் ஏறி நின்று கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் பகுதி இடம்பெற்றுள்ளது.
The Hindu மற்றும் Times of India செய்தித்தாள்களில் நவம்பர் 18, 2024 அன்று வெளியான செய்திகளின்படி பாட்னாவின் காந்தி மைதானத்தில் புஷ்பா 2 நடிகர்களை காண்பதற்காக கூடிய பெருங்கூட்டத்தால் குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகளிலும் இரும்பு தடுப்புகளுக்கு மேல் ஏறி கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் துணை ராணுவ படையினரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவர்களை நோக்கி மக்கள் செருப்புகளை வீசுவதையும் காணமுடிகிறது.
மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கும்பமேளாவில் துணை ராணுவ படையினர் மீது செருப்புகள் வீசப்பட்டதாக பரவும் செய்தி தவறானது என்றும் இந்த சம்பவம் நவம்பர் 17, 2024 அன்று புஷ்பா 2 ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடைபெற்றது என்றும் நிரூபிக்க முடிகிறது.