சென்னையில் வடமாநில இளைஞர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவர்களது உடல்கள் பொது இடங்களில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ‘தமிழகத்தில் திமுகவினர் வடமாநிலத்தவர் மீது வெறுப்பைத் தூண்டுவதால்தான், இங்கிருப்பவர்கள் அவர்களைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்றுள்ளனர்’ என்று பாஜகவினர் சமூக வலைதளங்களில் (Archive) ஒரு செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று தெரியவந்தது.
சென்னையில் நடந்த இக்கொலைச் சம்பவம் குறித்து ஊடகச் செய்திகளை ஆய்வு செய்தோம். கடந்த ஜனவரி 26ஆம் தேதி தந்தி டிவி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட உடல், பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவருடையது என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்தச் கொலையில் தொடர்புடைய நபர்களைக் காவல்துறை கைது செய்தது.
இதில், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படுபவர்கள் என அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த கௌரவ் குமாருக்கும், அதே கல்லூரியில் கட்டிட வேலை பார்த்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
கட்டிடத் தொழிலாளர்கள் கௌரவ் குமாரின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதைக் கௌரவ் குமார் தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட பிரச்சினையில், அவர்கள் கௌரவ் குமாரைக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதுடன், இரண்டு வயது குழந்தையையும் கொன்று உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசியதாகக் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட ஊடகங்களும் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் வடமாநிலத்தவர்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இதன் மூலம், இந்தக் கொலைக்கும் தமிழக மக்களுக்கும் அல்லது அரசியல் ரீதியான வெறுப்புப் பிரச்சாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
மேலும், தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்திலும் இவ்வழக்கில் பீகாரைச் சேர்ந்த மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக நேற்று (ஜன 29) பதிவிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, கொலை செய்யப்பட்டவர்களும், கொலை செய்தவர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை மறைத்து, தமிழக மக்கள் வடமாநிலத்தவர்கள் மீது நிகழ்த்தியத் தாக்குதலாகச் சித்தரிப்பது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும்.