Fact Check: தேமுதிக கொடி திமுகவுடன் கூட்டணி அமைத்த பின் அறுந்து விழுந்ததா? உண்மை அறிக

தேமுதிகவின் கொடியேற்றப்பட்டபோது பாதியில் கொடி அறுந்து விழுந்ததாகவும் அது திமுகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் நடைபெற்றதாகும் கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Newsmeter Network
Published on : 24 Feb 2026 1:09 AM IST

Fact Check: தேமுதிக கொடி திமுகவுடன் கூட்டணி அமைத்த பின் அறுந்து விழுந்ததா? உண்மை அறிக
Claim:திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேமுதிகவின் கொடி ஏற்றும் போது அறுந்து விழுந்தது என ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு காணொலி வேகமாகப் பரவி வருகிறது. அதில், தேமுதிக கட்சி திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் அலுவலகத்தில் கொடியேற்றும் போது பாதி கம்பத்திலேயே கொடி அறுந்து விழுந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு இது ஒரு கெட்ட சகுனம் என்றும், விஜயகாந்தின் ஆன்மா இந்த கூட்டணியை மன்னிக்காது என்றும் விமர்சித்து இந்தப் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.


Fact check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மைத்தன்மை குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். இந்த காணொலியில் இடம்பெற்றுள்ள நியூஸ் தமிழ் 24X7 தொலைக்காட்சியின் லோகோவை அடிப்படையாகக் கொண்டு

அந்த ஊடகத்தின் யூடியூப் பக்கத்திற்கு சென்று தேடிப் பார்த்தோம். தேடியபோது, இது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பதிவேற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அது மட்டுமின்றி வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

அதாவது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க போட்டியிட்டது. அந்த தேர்தலில் ஒரு தொகுதியிலும் கூட தே.மு.தி.க-வால் வெற்றி பெற முடியவில்லை. கூட்டணிக்கு தலைமை ஏற்ற அ.தி.மு.க-வால் கூட அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அதன் பிறகு இப்போது 2026ல் தான் தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்துள்ளது. இதன் மூலம் தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்த பிறகு அக்கட்சியின் கொடி, அக்கட்சியின் அலுவலகத்திலிருந்த கொடிக் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்தது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Conclusion:

முடிவாக நம் தேடலில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது நடந்த ஒரு பழைய காணொலியை, தற்போது திமுக-வுடன் கூட்டணி வைத்துள்ள சூழலில் நடந்ததாகக் கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
Next Story