ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து காலியாக இருந்த இத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், “ஈரோட்டில் செருப்படி வாங்கிய திமுக.. ஆட்சியில் இருந்து திருடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்..” என்று வாக்கு சேகரிக்க வந்த திமுகவினரை பொதுமக்கள் விரட்டுவதாக கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் காணொலியில் உள்ள சம்பவம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திருவண்ணாமலை நடைபெற்றது என்றும் தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மையை கண்டறிய காணொலியில் உள்ள காரின் முன்பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த கு. பிச்சாண்டி என்ற பெயரை பயன்படுத்தி கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வைரலாகும் காணொலியுடன் செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி, “நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி இன்று கீழ்பென்னாத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது பொதுமக்கள் அவரது காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விசாரிக்கையில், கடந்த ஆண்டு செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இரு சமூகத்தினர் சென்று வழிபாடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஊர் பொதுமக்கள், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை துணைச் சபாநாயகருமான கு.பிச்சாண்டிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அப்போது பிச்சாண்டி அப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் காணவில்லை எனவும், தங்கள் ஊருக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் குற்றம் சாட்டினர். மேலும், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தங்கள் ஊருக்கு அவர் இதுவரை வந்ததே இல்லை எனக் கூறி பிச்சாண்டியின் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது என்று தெரியவந்தது.
இதே செய்தியுடன் வைரலாகும் அதே காணொலியை Hindustan Times Tamil ஊடகம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மேலும், அதே ஏப்ரல் 8ஆம் தேதி ABC news India (tamil) என்ற யூடியூப் சேனலிலும் இக்காணொலி பகிரப்பட்டுள்ளது.
முடிவாக, நம் தேடலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரச்சாரத்தின் போது திமுகவினரை விரட்டிய பொதுமக்கள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.