சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட 'Pampers' டயப்பர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததாக ஒரு நியூஸ்கார்டு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக இவை விநியோகிக்கப்பட இருந்ததாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரலாகும் அந்த நியூஸ்கார்டை நுணுக்கமாக ஆய்வு செய்தபோது, அது போலியானது என்பதற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன.
இந்த நியூஸ்கார்டு சன் நியூஸ் (Sun News) தொலைக்காட்சியின் வடிவமைப்பைப் போன்று இருந்தாலும், அதில் "Saturn News" என்ற போலியான ஊடகத்தின் லோகோ இடம் பெற்றுள்ளது. அந்த கார்டில் பல தமிழ் எழுத்துப் பிழைகள் உள்ளன. குறிப்பாக 'தலைவர்' என்ற சொல்லில் உள்ள 'லை' என்ற எழுத்து, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களில் வருவது போல சிதைந்து காணப்படுகிறது.
எங்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்த Hive Moderation, Sightengine போன்ற செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவிகள் மூலம் அந்தப் படத்தை ஆய்வு செய்ததில் வைரலாகும் நியூஸ் கார்டு Ai தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
முடிவாக, மு.க. ஸ்டாலின் புகைப்படம் பொறித்த டயப்பர்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது. இது பொதுமக்களைக் குழப்பும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு போலியான நியூஸ்கார்டு ஆகும்.