பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா வங்கதேச இந்து பெண்? பரவும் மேற்கு வங்க புகைப்படம்
வங்கதேசத்தில் இந்து பெண் ஒருவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையானதாக பரவும் தவறான தகவல்
By Neelambaran A Published on 1 Feb 2025 1:31 PM ISTClaim: வங்க தேசத்தில் இந்து பெண் ஒருவர் பாலியம் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்
Fact: பரவும் செய்தி தவறானது. இது மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நடைபெற்றது
சமீப நாட்களில் வங்கதேசத்தில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த சூழலில் இந்து மத மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் குறித்த கவலை எழுந்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் மற்றும் காழ்புணர்ச்சியால் சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சம் உருவாகியுள்ளது.
இந்த சூழலில் சமூக வலைதளங்களில் இந்து பெண் ஒருவரில் சடலம் வயல்வெளியில் கிடப்பதன் காணொலி பகிரப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களால் அப்பெண் வங்கொடுமை செய்யப்பட்ட கொலையுண்டதாக காணொலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“வங்கதேசத்தில் இந்து பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உடனே உலகம் கண் திறக்காமல் இருந்தால் வங்கதேச இந்துக்கள் துடைதெறியப்படுவார்கள், குறிப்பாக ஜிகாதிகளால் பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள்’, என X தள பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். (Archive)
Fact Check:
இந்த செய்தி தவறானது என நியூஸ்மீட்டர் ஆய்வில் தெரியவந்தது. மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நடந்த குற்றம் என்பதை கண்டறிய முடிந்தது.
காணொலியின் ப்ரெம்கள் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்த போது Newsbazar24.com தளத்தில் பிப்ரவரி 24, 2024 தியதி அன்று பதிவாகியுள்ள செய்தியை காண முடிந்தது.
அந்த தளத்தில் பகிரப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் வங்கதேச எல்லையை ஒட்டிய மால்டா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியில் ‘மால்டா மாவட்டத்தில் வயல் வெளியிலிருந்து அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. வைஷ்ணவ் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பக்ராபாத் கிராம ஊராட்சி சர்கார்பாரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது’, என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மூன்று நாட்கள் கடந்த பிறகு அவரது தந்தைக்கு சொந்தமான வயலில் உடல் கண்டறியப்பட்டுள்ளது. தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த 35 வயதான மௌசுமி மோண்டல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
தொடந்து நடத்தப்பட்ட தேடல்களில் இதனை உறுதி செய்யும் அதிக செய்திகளை கண்டறிய முடிந்தது.
Hindustan Times பத்திரிகை 2024 பிப்ரவரி 24 அன்று, மால்டாவில் மேலும் ஒரு பாலியல் வன் கொடுமை மற்றும் கொலை, ஒரே நாளில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு’, என செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில், நான்கு நாட்களுக்கு முன்னர் மௌசுமி குடும்பத்தினரை சந்திக்க வந்ததாகவும், வயலை சுற்றிப்பார்க்க சென்ற அவர் வீடு திரும்பவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன் கொடிமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து விசாரணையை அதிகாரிகள் துவங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aajkaal.in செய்தி இணையதளமும் மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் செய்தியை வெளியிட்டுள்ளது.
மௌசுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், வன்கொடுமை நடந்திருக்கலாம் எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat செய்தி நிறுவனமும் கொலை மற்றும் வன் கொடுமைக்கான சாத்தியம் குறித்தி செய்தி வெளியிட்டுள்ளது.
நம் தேடலின் முடிவாக வங்கதேசத்தில் இந்து பெண் வன் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பரவும் செய்தி தவறானது என்பதை நிரூபிக்க முடிகிறது.