தமிழகத்தில் 2024 தேர்தலுக்காக மெட்டா விளம்பரங்கள் மூலம் நடுநிலை அடையாளத்துடன் அரசியல் கட்சிகள் வெளியிட்ட பிரச்சார விளம்பரங்கள்!
பாஜக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மெட்டாவை பயன்படுத்தி 2024 தேர்தலுக்கு தமிழ்நாட்டில் எவ்வாறு பிரசார விளம்பரங்களை வெளியிட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக ஆய்வு செய்துள்ளோம்
By Newsmeter Network Published on 13 Jun 2024 2:45 PM ISTதமிழ்நாட்டை முதன்மையாக கொண்டு அரசியல் கட்சிகளின் பின்னணியில் Meta Ads மூலம் சமூக வலைத்தள பக்கங்களில் செய்யப்பட்ட விளம்பரங்கள் குறித்த தரவுகளை அடிப்படையாக கொண்டு ICFJ-வின் (International Center for Journalists) Disarming Disinformation Program-ல் இணைந்து NewsMeter மற்றும் YouTurn செய்த பகுப்பாய்வு.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொண்டன. இதில் நாளிதழ், தொலைக்காட்சி, துண்டு பிரசுரங்கள் மூலம் பிரசாரங்களை மேற்கொண்டாலும், தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தனி கவனம் செலுத்தின. இதற்கான தனி பட்ஜெட்டை ஒதுக்கி அதற்கான ஐடி பிரிவுகள் மூலம் தங்களது பணிகளில் தனிக் கவனம் செலுத்தின.
காணொலி, மீம்ஸ், கார்ட்டூன், கேள்வி பதில் வடிவிலான பிரசாரம் என விளம்பர நிறுவனங்களையே பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு தங்களது முனைப்பை காட்டின. இதற்காக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு கட்சியினரும் அதிலும் குறிப்பாக பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இளைஞர்கள் மற்றும் முதன் முறை வாக்காளர்களை கவர பெருந்தொகையை செலவிட்டுள்ளன. சில அரசியல் கட்சிகள் மீம்ஸ் பக்கங்களுக்குப் பின்னால் கட்சிப் பெயரை மறைத்து பிரச்சாரம் செய்து வருகின்றன.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், கட்சி அடையாளத்தில் இருந்து வரும் மீம்கள், பேச்சுகள், குற்றச்சாட்டுகள் என அனைத்தும் வெறும் அரசியல் லாபத்திற்காக வெளியிடப்படுகிறது என்கிற பொது புரிதல் இருப்பதால் பலர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதில் உண்மையான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், கட்சி சாராத பொது மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இதுவே, நடுநிலை அடையாளத்தோடு செய்யப்பட்டும் உண்மையற்ற பிரச்சாரங்கள் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். எனவே, தனி அடையாளத்தோடு இயங்கும் பக்கங்களை அணுகியோ அல்லது தாமாகவே தொடங்கியோ தற்போது கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
இதில், சில சமயம் பொய்களாகவும், வெறுப்பு பேச்சுகளாகவும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவையாக இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் பார்வை தம் மீது விழாது என்கிற துணிவில் கட்சிகள் மேலும் மேலும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. கட்சி சாயம் இல்லாத பல புதிய பக்கங்கள் மூலம் கோடிக்கணக்கில் செலவு செய்து இந்தியா முழுவதும் விளம்பரங்கள், பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. இதில், சில பக்கங்கள் மாநில வாரியாகவும் விளம்பரங்களை வெளியிடுகின்றன. மேலும், சில மாநிலங்களுக்கென பிரத்யேக பக்கங்களும் கூட உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பல பக்கங்கள் தனித்தனியாக பல பெயர்களில் இயங்கினாலும் அவற்றின் விளம்பர செலவுகளுக்கான பணம் ஒரே இடத்தில் இருந்து வருகின்றது.
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டு பயனாளர்களை அதிக அளவு சென்று சேரும் வகையில், Meta-வில் செய்யப்பட்ட விளம்பரங்கள் அதன் மொத்த செலவினத்தின் அடிப்படையில் பட்டியலிட்டோம். அதில், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை Way2News என்ற ஊடக பக்கம் முதல் இடத்தை பிடித்தது. மேலும் இப்பட்டியலில் DIPR TN, MyGovIndia என்கிற அரசு பக்கங்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை தவிர்த்து அரசியல் கட்சிகளான பாஜக மற்றும் திமுக உள்ளிடவையின் அதிகாரப்பூர்வ மற்றும் அவற்றின் ஆதரவு பக்கங்களும் முதல் பத்தில் இடம் பெற்றுள்ளன.
மார்ச் 16ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற இருந்த தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் Meta-வில் அதிகம் விளம்பரம் செய்த பக்கங்களையும் பட்டியலிட்டோம். அம்மாதத்தில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற திமுகவின் ஆதரவு பக்கம் அதிகப்படியாக Meta விளம்பரத்திற்கு செலவு செய்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பாஜக-வின் அதிகாரப்பூர்வ பக்கமும் அதன் ஆதரவு பக்கமான ’Tamilakam’ பக்கமும் உள்ளது.
அரசியல் கட்சிகள் தங்களது அதிகாரப்பூர்வ பக்கங்களில் விளம்பரம் செய்வதைக் காட்டிலும், புதிய பெயர்களில் பொது அடையாளத்துடனும் நடுநிலை அடையாளத்துடனும் இயங்கும் பக்கங்களில் அதிகம் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Methodology:
Meta Ads Library பக்கத்தில் “Issues, elections or politics” என்னும் பிரிவை தேர்ந்தெடுத்து அதில் நாம் தேடும் பக்கத்தின் பெயரை பதிவிட்டு எடுத்துக்கொண்டோம். Eg.Meme Xpress
அடுத்த பக்கத்தில் வரும் பட்டியலில் Filter Option மூலம் தமிழ்நாடு என்னும் Region தேர்வு செய்தோம்.
அதிலேயே தேதி வரையறுத்து அனைத்து மெட்டா நிறுவனத்தின் தளங்களிலும் Filter செய்தோம். Jan 1, 2024 to Apr 30, 2024
அதில் கிடைத்த தரவுகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அதன் Reach, செலவு செய்யப்பட்ட தொகை, எந்தக் கட்சிக்கு எதிராக வெளியிடப்பட்டது என்னும் தகவல்களை சேகரித்தோம்.
ஒவ்வொரு விளம்பரமும் எத்தனை முறை பார்க்கப்பட்டது (Impressions) என்பதும் அதற்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்பதும் குறைந்தபட்ச அளவை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டு அதனை தொகுத்து ஒரு Summary எழுதியுள்ளோம்.
Meme Xpress
இந்த பெயரில் இயங்கும் ஒரு சமூக வளைதள பக்கம் Meta நிறுவனத்தின் Facebook மற்றும் Instagram ஆகிய சமூக ஊடகங்களில் அதிமாக செயல்பட்டு வருகின்றன. Facebookல் டிசம்பர் 2023ல் தான் இந்த பக்கம் தொடங்கப்பட்டது. இதன் வேலையே அரசியல் சார்ந்த மீம்களை பகிர்வது தான். அதிலும் குறிப்பாக, பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பாஜகவிற்கு எதிரான கட்சிகளை தாக்கும் விதத்தில் இருக்கும் மீம்களை பதிவாக போடுவது மற்றும் அவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல விளம்பரங்கள் வெளியிடுவது தான் இந்த பக்கத்தின் பிரதான வேலை. 2023 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த பக்கத்திற்கு வெறும் இரண்டாயிரம் லைக்குகளும் சுமார் மூன்றாயிரம் followers மட்டுமே உள்ளனர்.
Meme Xpress என்னும் பெயரில் செயல்படுவதோடு Meme Hub என்னும் பெயரில் தனியாக இன்னொரு பக்கத்தையும் உருவாக்கி அதன் மூலமும் Meme Xpress இயங்கி வருகிறது. இந்த இரண்டு பக்கங்களும் முன்பு ஒரே பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தியது. அண்மையில் தான் Meme Hub பக்கத்திற்கு தனியாக ஒரு லோகோ உருவாக்கப்பட்டது. ஆனால், அதுவும் Meme Xpress லோகோவைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
Meme Xpress தனது பக்கத்தில் விளம்பரங்கள் செய்ய Meta நிறுவன சமூக வளைத்தளங்களில் ரூபாய் 17.67 லட்சம் செலவு செய்துள்ளது. இதில் Ulta Chashma என்னும் பக்கத்தின் மூலம் 29 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் Meme Hub என்னும் பெயரில் இயங்கும் பக்கத்திற்கு ஏறத்தாழ ரூபாய் 9.18 லட்சம் அளவிற்கு Meme Xpress பக்கத்தின் மூலம் விளம்பர செலவுகளை செய்துள்ளது.
மேலும், பல விளம்பரங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதால் நம்மால் அதனை எந்தக் கட்சிக்கு எதிரானது என்று உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும், மற்ற அனைத்து பதிவுகளும் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எதிராகவே இருப்பதினால், இவையும் இந்தியா கூட்டணி கட்சிக்களுக்கு எதிரான விளம்பரங்கள் என்று அனுமானிக்கலாம்.
இப்பக்கம் காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செய்த விளம்பரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 5.60 கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் செய்யப்பட்ட விளம்பரங்கள் அனைத்தும் காங்கிரஸ் (43.96%), திமுக (35.16%) மற்றும் இந்தியா கூட்டணிகளுக்கு (20.88%) எதிரான பதிவுகளாகவே உள்ளன.
மாதிரி 1:
Tom & Jerry கார்டூன் வீடியோவை கொண்டு செய்யப்பட்டுள்ள இந்த மீமில் மக்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை படித்த பின் வெடித்து சிரிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.
மாதிரி 1: மலை வழிப்பாதையில் ஒரு பேருந்து செல்வது போலவும் அதில் இரண்டு குழந்தைகள் அமர்ந்து செல்வது போலவும் ஒரு கார்ட்டூன் மீம் வரையப்பட்டுள்ளது. அதில், ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து மலைகளின் அழகையும் பள்ளத்தாக்குகளையும் பார்த்து ரசித்தவாறே இருப்பது திமுக தலைவர்களின் குழந்தைகள் என்றும், வெறும் பாறைகளை பார்த்தவாறு அமர்ந்திருப்பது தமிழர்களின் குழந்தைகள் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக கால் பதிக்க முயற்சித்து வரும் மாநிலங்கள் ஆகும். இவ்விரண்டிலும் மாநில கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் திருணாமூல் காங்கிரஸ் கட்சிகள் பலமாக இருக்கின்றன. மேலும், இரண்டு மாநிலங்களிலும் ஒன்றிய அரசிடமிருந்து போதிய நிதி வரவில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. இவ்விரண்டிற்கும் கிட்டதட்ட ஒரே விதமான பிரச்சார யுக்தியை கடைபிடித்துள்ளனர். மோடியின் பரிசு என்று ஒரு காணொளியையும் ஸ்டாலினின் பரிசு என்று தமிழ் நாட்டிற்கும், மம்தா பானர்ஜியின் பரிசு என்று மேற்கு வங்காளத்திற்கும் இந்த வீடியோ மீம் எடிட் செய்யப்பட்டுள்ளது. இதில், மோடியின் பரிசு என்று வரும் போது மெட்ரோ ரயில், வந்தே பாரத் ரயில் போன்ற திட்டங்கள் கிடைத்ததாகவும், ஸ்டாலின் ஆட்சியில் குப்பை மேடுகள், தரமற்ற சாலைகள், மழையால் வெள்ளம் ஏற்படுவது போன்றவை தான் பரிசாக மக்களுக்கு கிடைத்ததாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதே போல், மம்தா ஆட்சியில் கலவரங்களே மேற்கு வங்காள மக்களுக்கு கிடைத்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
OBC, SC, ST பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ‘முஸ்லீம் லீக்கின்’ அறிக்கை போல் இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, பா.ஜ.கவில் பலரும் பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்குத் தான் அதிக வாக்குறுதிகளும் திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் Meme Express தனது Instagram பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளது. இதற்கு பதினெட்டாயிரத்திற்கும் மேல் லைக்குகள் வந்துள்ளன.
Meme Xpress பேஸ்புக் பக்கம் போலவே Political X-Ray பக்கமும் டிசம்பர், 2023ல் தான் தொடங்கப்பட்டுள்ளது. அரசியல் தொடர்புடைய மீம்களை விளம்பரங்களின் மூலம் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோர் மத்தியில் கொண்டு சேர்ப்பதே இப்பக்கத்தின் முதன்மை பணியாக உள்ளது. இந்த பக்கம் தொடங்கப்பட்ட புதிதில் செய்யப்பட பல விளம்பரங்கள் Meta-வின் விளம்பர வரம்புகளை மீறி இருப்பதாக கூறி நீக்கப்பட்டுள்ளன.
வெறும் 7 ஆயிரம் லைக்குகளும் 9 ஆயிரம் followers கொண்ட இப்பக்கம் ஜனவரி 1, 2024 முதல் ஏப்ரல் 30, 2024 வரையில் சுமார் ரூபாய் 15.22 லட்ச விளம்பரத்திற்காக செலவு செய்துள்ளது (தமிழ்நாடு மட்டும்). இந்தி, ஆங்கிலம், பெங்காலி, தமிழ் என பல மொழிகளில் இப்பக்கம் வெளியிடும் மீம் விளம்பரங்கள் முழுக்க முழுக்க பாஜகவிற்கு ஆதரவாகவும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எதிராகவும் உள்ளன.
விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்ட மொத்த தொகையில் இவர்களது பக்கத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூபாய் 9.58 லட்சமும், Ulta Chashma என்னும் பேஸ்புக் பக்கத்தில் இருந்து ரூபாய் 5.63 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் Political X-Ray பக்கத்தில் செய்யப்பட்ட விளம்பரங்கள் அனைத்திற்கு Ulta Chashma பக்கத்தில் இருந்தே செலவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய விளம்பரங்கள் மூலம் காங்கிரஸ் கட்சி அதிக இலக்காகியுள்ளது. தமிழ்நாட்டை பொருத்த அளவில் திமுக’விற்கு எதிராக அதிக விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் தமிழ்நாட்டில் அதிக பார்வையாளர்களை சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக இப்பக்கத்தின் மூலம் செய்யப்பட்ட விளம்பரங்கள் ஏறத்தாழ 10 கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதிகப்படியான முறை பார்க்கும் வகையில் விளம்பரப்படுத்தியதின் மூலம் வெறும் 14 மீம்கள் 1.33 கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
அதிகப்படியாக காங்கிரசுக்கு எதிராக 59 சதவீத விளம்பரங்கள் அமைந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக இந்தியா கூட்டணி (17.24%) மற்றும் திமுக-விற்கு (15.86%) எதிரான விளம்பரங்கள் உள்ளன. இதே போல் பாஜகவிற்கு ஆதரவான விளம்பரமும் சுமார் 7 சதவீதம் உள்ளது.
மாதிரி 1: பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம் நாங்கள் இந்தியாவை ஒன்றிணைப்பது போன்று பாசாங்கு செய்கிறோம். உண்மையில் நாங்கள் இந்தியாவை உடைக்க விரும்புகிறோம் என ராகுல் காந்தி சிந்திப்பது போன்று மீம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மீமில், பாரத் ஜோடோ Lotion என்ற tube-ல் இருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
Library ID: 789309176366543
மாதிரி 2: OBC, SC, ST உள்ள இடஒதுக்கீடு என்ற படகில் முஸ்லிம்களை ராகுல் காந்தி ஏற்றிவிட்டதாகவும் பிறகு முஸ்லிம்கள் சேர்ந்து மற்ற பிரிவினரை தண்ணீரில் தூக்கி வீசுவதாகும் இந்த மீம் உள்ளது. அரசியல் சார்ந்த விமர்சனங்களை தாண்டி மத ரீதியான வெறுப்பு பிரச்சாரத்தையும் இப்பக்கம் விளம்பரம் செய்துள்ளது.
மேற்கண்ட மீம் தமிழ்நாட்டை மையமாக கொண்டு விளம்பரப்படுத்தப்படவில்லை. எனினும், இதே மாதிரியான ஒரு வீடியோ மீமை பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் தர்மபுரி மற்றும் ஒன்றிய இணையமைச்சர் L.முருகன் (முன்னாள் மாநில தலைவர் - தமிழ் நாடு பாஜக) ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மாதிரி 1: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை DTH-ல் (Direct-to-Home) ஒளிபரப்ப தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடை விதித்ததாகவும் ஆனால், தமிழ் நாட்டு மக்கள் தங்கள் இதயங்களில் இருந்து (Direct-to-Heart) நேரடியாக திறப்பு விழாவை பார்த்ததாகவும் இந்த மீமில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் நாட்டில் அப்படி எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
மாதிரி 2: தமிழ் நாட்டின் மாநில நிதியை பயன்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்வதாக இந்த மீம் சித்தரிக்கிறது. இது 30.5 லட்ச முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கர்நாடக பற்றிய மீம்ஸ்:
மாதிரி 1: காவிரி விவகாரத்தில் தமிழ் நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவும் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரசும் கை கோர்த்துக் கொண்டு தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தரவில்லை என இந்த மீமில் காண்பிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இப்பதிவு 30 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
மாதிரி 2: கர்நாடகா காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தராமல் இருந்த நேரத்தில் தமிழ்நாட்டில் காங்கிரசும் திமுகவும் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு இருந்ததாக இந்த மீம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது 38 லட்சம் முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது.
இப்படி காவிரி நதி நீர் பிரச்சனையை மையமாக கொண்டு இப்பக்கத்தில் செய்யப்பட்ட விளம்பரங்கள் 74 லட்ச முறைக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது. இவ்வகையிலான மீம்கள் இரு மாநிலங்களுக்கு இடையே பிளவினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Tamilakam - தமிழகம்
Tamilakam - தமிழகம் என்ற பக்கம் தமிழ்நாட்டை இலக்காக வைத்து கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து பல மீம்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இப்பக்கத்தில் அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 18ம் தேதிதான் கடைசியாக பதிவிடப்பட்டுள்ளது. அதற்கு பிறகு எந்த பதிவும் செய்யப்படவில்லை. மொத்தமாக இப்பக்கம் விளம்பரத்திற்கு செலவு செய்த ரூ.83.04 லட்சத்தில் கிட்டத்தட்ட ரூபாய் 17 லட்சம் Ulta Chashma என்ற பக்கம் sponsor செய்துள்ளது.
தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி தொடர்பாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களுக்கு விளம்பரங்கள் அளித்திருந்தார். விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீன கொடி இருந்த விவகாரத்தை சர்ச்சையாக்கி அரசியல் ஆதாயம் தேட முனைந்தது பாஜக. இச்சூழலில், அடுத்த நாளே இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “விளம்பரம் வடிவமைத்தவர் சில தவறுகளை செய்து விட்டார். அதனை நாங்கள் கவனிக்கவில்லை. மற்றபடி எந்தவித உள்நோக்கமும் இல்லை” என்று விளக்கமளித்தார். இந்நிலையில், சீனாவையும், முதல்வர் ஸ்டாலினையும் தொடர்பு படுத்தி Tamilakam - தமிழகம் பக்கம் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை விளம்பரங்களாக வெளியிட்டது. இதற்காக அந்த ஃபேஸ்புக் பக்கம் சுமார் 1.25 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளது.
திமுகவை ‘போதை மாஃபியா’ என்று போதைப்பொருள் கடத்தலோடு தொடர்புபடுத்தி பதிவுகளை பதிவிட்டுள்ளது. இதற்காக ரூ.6.25 லட்சம் செலவு செய்துள்ளது. இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒரு நிமிடம் 42 விநாடிகள் ஓடக் கூடிய வீடியோவையும் தயாரித்து இருந்தது. போதைப் பொருள் கடத்தியதாக சமீபத்தில் கைதான தி.மு.க முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்கிற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது. மேலும் ஒருபடி மேலே சென்று ஜாஃபர் சாதிக், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்கொடை அளித்ததாகவும் இந்த காணொலி மூலம் குற்றஞ்சாட்டியது.
திமுகவை ஹிந்து விரோத கட்சி என்று காட்டுவதற்காக சுமார் 3 லட்சம் ரூபாய் செலவழித்து காணொலி ஒன்றை வெளியிட்டு, அதில் “அதனால்தான் சப்கா சாத் சப்கா விகாஸ் என்கிறது பாஜக” என்ற தலைப்பில் 1 நிமிடமும் 41 வினாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்றை விளம்பரப்படுத்தி இருந்தது. அதன், 50வது நொடியில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் இந்துக்கள் குறிவைக்கப்பட்டு இஸ்லாமியர்களின் வாக்குகள் திருப்திப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றும் தெரிவித்திருந்தது. தொடர்ந்து அதே காணொலியில், 58வது நொடியில், “தமிழ்நாட்டை விட குஜராத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகமான முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்கு சென்றுள்ளனர்” என்று கூறியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து 6028 பேரும், குஜராத்தில் இருந்து 29540 பேரும் ஹஜ் யாத்திரைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இதனையடுத்து, ஹஜ் யாத்திரை தொடர்பான தகவலை ஆய்வு செய்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி PIB(Press Information Bureau) இதுகுறித்து பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, 2020ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு 3736 என்றும் அதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6028 என்றும் தெரியவந்தது. அதேபோன்று குஜராத் மாநிலத்திற்கான ஒதுக்கீடு 7285 என்றும் அதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 29,540 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள காணொலியில் ஹஜ் பிரயாணத்திற்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை ஹஜ் பிரயாணம் செய்தவர்களின் எண்ணிக்கை என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அதே சமயத்தில் 2020ஆம் ஆண்டு ஹஜ் பயணம் கரோனா நோய் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் ஹஜ் பிரயாணத்திற்காக மாநில வாரியாக ஒதுக்கீடு வழங்கப்படுவது வழக்கம். இப்பணியை ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹஜ் கமிட்டி மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு 3736ம், குஜராத்திற்கு 7285 இடங்களும் ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக தலைமையிலான ஆட்சியே தமிழ்நாட்டில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்துப் பிழை மற்றும் மீம் முறை பிரச்சாரம்
தமிழகத்தில் திமுக சர்வாதிகாரம்” என்ற தலைப்பில் கடந்த மார்ச் மாதம் 1 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் செலவிட்டு 1 நிமிடமும் 37 வினாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 00:04 பகுதியில் “யவாஓம் கோ நஷேடி பனாங்கே” என்று இந்தி வார்த்தையை தமிழ் மொழியில் எழுதியுள்ளனர். மேலும், மீம் வடிவிலும், கார்டூன் வடிவிலும் பல்வேறு அரசியல் எதிர்க் கட்சிகளையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் தவறாக சித்தரித்து பிரசாரம் செய்துள்ளனர்.
தமிழில், “அதனால்தான் சப்கா சாத் சப்கா விகாஸ் என்கிறது பாஜக” என்ற தலைப்பில் 1 நிமிடமும் 41 வினாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்றை Tamilakam பக்கம் விளம்பரப்படுத்தி இருந்தது. இதே பதிவை அதே தலைப்பில் மலையாளம் மொழியில் ரூ. 2.50 லட்சம் செலவழித்து Malabar Central என்ற பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இக்காணொலியின் தமிழ் மொழி பதிவின் 58வது நொடியில் “தமிழ்நாட்டை விட குஜராத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகமான முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்கு சென்றுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. அதே மலையாள மொழி பதிவின் 43வது நொடியில் “கேரளாவை விட குஜராத்தில் இருந்து நான்கு மடங்கு அதிகமான முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்கு சென்றுள்ளனர்” என்று கூறியுள்ளது. மற்றபடி தமிழிலும், மலையாளத்திலும் அனைத்து தகவல்களும் ஒன்றாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று பாரத மாதாவையும் காங்கிரஸ் கட்சியையும் தொடர்புபடுத்தி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே கார்டூனை மொழியை மட்டும் மாற்றி பதிவிட்டுள்ளனர். மேலும், “சேர்ந்து வாழ்வதால் நாகரீகம் பெருகும், ஆனால் இதை இவர்களுக்கு யார் விளக்குவது?” என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பதிவிட்டுள்ளனர். அந்தந்த மொழி பதிவுகளுக்கு ஏற்றவாறு மாநில முதல்வர்களின் புகைப்படத்தை மட்டும் மாற்றி பதிவிட்டுள்ளனர்.
அரசியல் சார்ந்த மீம்களை பதிவிடும் இப்பக்கம் 2023, நவம்பர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பக்கங்களை போலவே இவர்களும் Meta விளம்பரத்தின் மூலம் தங்களது மீம்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களை சென்றடையும் வழியை பின்பற்றியுள்ளனர். அதுவும் பாஜகவிற்கு ஆதரவான மற்றும் இந்திய கூட்டணிக்கு எதிரான மீம்களை மட்டுமே இப்பக்கத்தில் காண முடிகிறது.
வெறும் 7 ஆயிரம் followers-ஐ கொண்டுள்ள இப்பக்கத்தில் சுமார் 2.56 லட்ச ரூபாய்க்கு Meta-வின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது இப்பத்தில் செய்யப்பட்ட விளம்பரத்தின் தொகை மட்டுமே. ஏனென்றால் இப்பக்கம் இன்னபிற பேஸ்புக் பக்கங்களில் விளம்பரம் செய்ய Sponsor செய்துள்ளது. அவற்றின் பெயர் மற்றும் தொடங்கப்பட்ட நாள் கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
அப்பக்கங்கள்: Amaar Sonar Bangla, Political X-Ray, MemeXpress, Tamilakam, Kannada Sangamam, Aamcha Maharashtra, Sidha Chashama, Telangana Central, Malabar Central, Sonar Bangla, Siyasat Di Baat.
இப்பக்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே தமிழ்நாட்டை மையமாக கொண்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் ’தமிழகம்’ என்ற பெயரில் ஒரு புதிய பக்கம் தொடங்கப்பட்டதால் அதன் பிறகு நேரடியாக Ulta Chashma பக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை இலக்காக கொண்டு விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.
இதுவே கட்சி ரீதியில் பார்க்கையில் காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எதிரான விளம்பரங்களே உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் ஆட்சியில் உள்ள திமுகவிற்கு எதிரான பதிவுகள் மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய திமுகவிற்கு எதிரான மீம் விளம்பரங்கள் தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்களை சென்று சேரும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜகவிற்கு ஆதரவான மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு எதிரான மீம் விளரம்பரங்கள் ஒரு பக்கம் இருக்க, விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான மீம்களுக்கும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இப்பக்கத்தில் செய்யப்பட்ட விளம்பரங்களில் 38.4 சதவீத விளம்பரங்கள் இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் 34.6 சதவீத விளம்பரங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் உள்ளன. இதனை தவிர்த்து திமுக (6%) மற்றும் விவசாயிகள் போராட்டத்திற்கு (6%) எதிரான பதிவுகளும் உள்ளன.
மாதிரி: ராகுல் காந்தி ஒரு மேடையில் பேசும் போது உருளைக் கிழங்கை ஒருபுறம் செலுத்தினால் மற்றொரு பக்கத்தில் தங்கமாக வெளிவருவது போன்ற இயந்திரத்தை நிறுவுவேன் எனப் பேசியதாக ஒரு சிறிய கிளிப் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. ஆனால், மோடி அப்படியான வாக்குறுதிகளை அளிப்பதாகவே ராகுல் பேசி இருந்தார். ராகுல் காந்தி பேசியதாக பரவிய பொய் செய்திக்கு வலுசேர்க்கும் விதத்தில் இந்த மீம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
திமுகவிற்கு எதிரான மீம்ஸ்:
மாதிரி 1: தமிழ் நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவின் அமைச்சரவையில் பல அமைச்சர்கள் பள்ளி படிப்பை கூட நிறைவு செய்யவில்லை என பாஜக தமிழ் நாடு மாநில தலைவர் பேசிய ஒரு வீடியோ இப்பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மாதிரி 2: திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் T.R.பாலு ஒன்றிய அமைச்சராக இருக்கும் போது இந்து கோயில்களை இடித்ததாக ஒரு மேடையில் பேசியுள்ளார் என ஒரு வீடியோ கிளிப் பாஜக-வின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இது அவர் பேசியதின் ஒரு சிறு பகுதி மட்டுமே. சாலை போடுவதற்காக கோயில், மசூதி, மாதா ஆலயங்களை இடித்து பிறகு அதைவிட பெரியதாக கட்டி கொடுத்துள்ளேன் என்றுதான் அவர் பேசியிருந்தார். அண்ணாமலை பதிவிட்ட அதே பொய் செய்தி இப்பக்கத்திலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான மீம்ஸ்:
மாதிரி: ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்ட திருத்தங்கள் மற்றும் 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பஞ்சாப் விவசாயிகள் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் இந்திய கொடியை அவமதிப்பதாக ஒரு வீடியோ இப்பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ.
தொடக்கத்தில் கூறியதை போல Ulta Chashma பிற பக்கங்களுக்கும் Sponsor செய்துள்ளது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட அப்பக்கங்கள் அந்தந்த மாநில மொழிகளிலேயே இயங்குகின்றன. இதில் அடுத்ததாக கவனிக்க வேண்டிட்ய விஷயம் என்னவென்றால் Tamilakam, Kannada Sangamam, Malabar Central ஆகிய பக்கங்கள் கடந்த பிப்ரவரி 9ம் தேதியும் Amaar Sonar Bangla பக்கம் மார்ச் 7ம் தேதியும் தான் தொடங்கப்பட்டுள்ளது. இப்பக்கங்கள் அனைத்துமே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ளன.
Ulta Chashmaa Sponsor செய்த பக்கங்களின் பட்டியலில் ‘Tamilakam - தமிழகம்’ குறித்து விரிவாக பார்த்து விட்டதால் பிற பக்கங்களில் வெளியான விளம்பரங்களின் உதாரணங்களை காண்போம்.
Kannada Sangamam
மாதிரி: நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் நான் மட்டும்தான் இருப்பேன் என ராகுல் காந்தி சொல்வது போல் ஒரு மீம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதே மீம் தமிழில் இயங்கக் கூடிய ’தமிழகம்’ பக்கத்திலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் Library ID: 1461489274464967
Amaar Sonar Bangla
மாதிரி: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தங்களது மாநிலம் பாதுகாப்பாக உள்ளது என பேசுவது போலவும், அவருக்கு பின்னால் மறைந்துள்ள ISIS, IM இயக்கத்தினர் தங்களின் பாதுகாப்பை பற்றிதான் முதல்வர் கூறுவதாகவும் மீம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட பக்கங்கள் தமிழ்நாட்டை மையமாக கொண்டு செய்த விளம்பரங்களின் செலவு சுமார் 1.27 கோடி.
சமூக வலைத்தளங்களில் மாநில அளவில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கவனத்தை செலுத்தின. இதில் திமுக, மு.க. ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்தது. இதற்காக ‘ஸ்டாலின் குரல்’ என தலைப்பிட்டு வீடியோக்களையும் வெளியிட்டது. “எல்லோரும் நம்முடன்” (Ellorum Nammudan) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் “ஸ்டாலினின் குரல்” என்று பிரசார பாடல்கள், மக்களின் பேட்டிகள் என்று பல்வேறு விதமான பிரசாரங்களை மேற்கொண்டது. இதற்காக 2024ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்த 17 லட்சத்து 29 ஆயிரத்து 300 ரூபாய் செலவழித்துள்ளது. Populus Empowerment Network என்ற திமுகவிற்கு சொந்தமான டிஜிட்டல் நிறுவனம் இப்பக்கத்தை நிர்வகித்து விளம்பரப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமானது என்று The Print செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம், திமுக தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை பிரச்சாரத்திற்காக பெரிதும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பக்கமான Ellorum Nammudan கடந்த ஏப்ரல் மாதம் 2 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 674 ருபாய் விளம்பரத்திற்காக செலவழித்துள்ளது. இதே பக்கம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 4 லட்சத்து 73 ஆயிரத்து 390 ரூபாய் என்று குறைவாக செலவழித்துள்ளது. Bharatiya Janata Party (BJP) என்ற பாஜகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் 77 லட்சத்து 31 ஆயிரத்து 886 ரூபாய் செலவழித்துள்ளது, இதே பக்கம் ஜனவரி முதல் மார்ச் வரையில் 22 லட்சத்து 91 ஆயிரத்து 80 ரூபாய் என்று குறைவாகவே செலவழித்துள்ளது. அதே போன்று Tamilakam - தமிழகம் பக்கம் ஏப்ரல் மாதம் 64 லட்சத்து 52 ஆயிரத்து 254 ரூபாய் செலவழித்துள்ளது. இதுவே, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 18 லட்சத்து 52 ஆயிரத்து 737 ரூபாய் என்று கடந்த மாதங்களை விட குறைவாகவே செலவழித்துள்ளது. மேலும், Ellorum Nammudan பக்கத்தை நிர்வகிக்கும் Populus Empowerment Network Private Limitedக்கு சொந்தமான Stalinin Kural என்ற பக்கம் 52 லட்சத்து 57 ஆயிரத்து 318 ரூபாய் செலவழித்து ஏப்ரல் மாத பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இப்பக்கம் ஜனவரி முதல் மார்ச் மாதப் பட்டியலிலேயே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக ஏப்ரல் மாதப் பட்டியலில் Way2News தமிழ் பக்கம் 36 லட்சத்து 16 ஆயிரத்து 900 ரூபாய் செலவழித்துள்ளது. அடுத்தடுத்த BJP Tamilnadu பக்கம் 17 லட்சத்து 55 ஆயிரத்து 196 ரூபாயும், Singai G Ramachandran என்ற பக்கம் 11 லட்சத்து 92 ஆயிரத்து 145 ரூபாயும், Maveeran Modi என்ற மோடி ஆதரவு பக்கம் 9 லட்சத்து 72 ஆயிரத்து 209 ரூபாயும், Meme Hub என்ற பக்கம் 9 லட்சத்து 18 ஆயிரத்து 942 ரூபாயும் செலவழித்துள்ளது. இவற்றில் Way2News தமிழ் பக்கம் 49 லட்சத்து 44 ஆயிரத்து 963 ரூபாய் செலவழித்து ஜனவரி முதல் மார்ச் மாதப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும், Maveeran Modi மற்றும் Meme Hub ஆகிய பக்கங்கள் ஜனவரி முதல் மார்ச் மாத செலவுப் பட்டியலிலேயே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வியூகம் வகுக்க IPAC நிறுவனத்துடன் இணைந்தது திமுக, இதன் பிறகே Populus Empowerment Network (PEN) நிறுவனம் துவங்கப்பட்டது. அந்தத் தேர்தலின் போது DMK - Dravida Munnetra Kazhagam என்ற பெயரில் திமுக அதிகாரப்பூர்வ பக்கங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், 2024 பொதுத் தேர்தலில் திமுக அல்லது மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் எந்த விளம்பரமும் வெளியிடவில்லை. மாறாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை Ellorum Nammudan, Stalinin Kural மற்றும் Makkalin Mudhalvar ஆகிய மூன்று பக்கங்களில் PEN விளம்பரங்களை வெளியிட்டது. தி.மு.க., பக்கங்களில் அதிக செலவு செய்யும் பக்கமான Ellorum Nammudan பக்கத்தில், அனைத்து விளம்பரங்களையும் PEN தங்களது பெயரில் வெளியிடவில்லை. ஜனவரி முதல் ஏப்ரல் வரை DMK, Ellorum Nammudan என்ற பெயர்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இருப்பினும், Meta Ad Libraryல் PEN விளம்பரங்களை வெளியிட்டதாக Disclaimer பகுதியில் குறிப்பிட்டுள்ளது, இது PEN வெல்வேறு அடையாளங்களில் விளம்பரங்களை வெளியிடுகிறது என்பதைக் குறிக்கிறது.
2024 தேர்தலின் போது PEN நிறுவனத்தின் திமுகவிற்கான விளம்பரப் பிரச்சாரப் பொறுப்பில் இருந்த விஜயிடம் பேசினோம், “ “Ellorum Nammudan” மற்றும் “Stalinin Kural” ஆகிய இரண்டு பக்கங்களும் 2024 பொதுத் தேர்தலுக்கான விளம்பரங்களை வெளியிடுவதற்காக கட்சியால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டவை. திமுக மற்றும் ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் கட்சியால் நிர்வகிக்கப்படுகின்றன, PEN நிர்வகிக்கவில்லை. விளம்பரங்களை இயக்குவதற்கு PEN பொறுப்பேற்று, இந்த நோக்கத்திற்காக பல பக்கங்களை உருவாக்கி வளர்த்தது”
“தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, இப்பக்கங்களில் விளம்பரங்களை வெளியிடத் தொடங்கினோம். ஆரம்பத்தில் தேர்தல் விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை. கட்சியின் செயலி, தொண்டர்களுக்கான அழைப்புகள் போன்றவற்றை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். அரசியல் விளம்பரங்களை வெளியிடும் போது மெட்டா ஒரு பக்கத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்கிறது, எனவே எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க இப்பக்கங்களை காலப்போக்கில் வளர்த்து பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்று விஜய் விளக்கினார்.
மெட்டாவில் விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகிறன?
மெட்டாவில் உள்ள அரசியல் விளம்பரங்கள், குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களை அடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்காளர்களை சென்றடையும். வாக்காளர்களை ஈடுபடுத்தவும், வாக்குகளை ஊக்குவிக்கவும் பயன்படுத்தப்படலாம். இந்த விளம்பரங்கள் Sponsored மற்றும் Paid by (விளம்பரதாரரின் பெயர்) என்ற Disclaimer பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களின் பக்கங்களில் தோன்றும். விளம்பரதாரரின் அடையாளம் பற்றிய வெளிப்படைத்தன்மை முக்கியமானது.
எடுத்துக்காட்டாக, "Ellorum Nammudan" பக்கம் திமுகவுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் PEN திமுகவின் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட பிரச்சார நிறுவனம் என்று தெரிந்தவர்களுக்கு, அந்தப் பக்கத்தில் வெளியாகும் எந்த விளம்பரமும் திமுகவால் வெளியிடப்படும் விளம்பரமாகவே கருதப்படும். திமுக, PEN மற்றும் "Ellorum Nammudan" ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி தெரியாத ஒருவர் இந்த விளம்பரங்களை எப்படிப் புரிந்துகொள்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
PEN நிறுவனம் ஒரே பக்கத்தில் பல்வேறு Disclaimerகளுடன் ஏன் விளம்பரங்களை வெளியிடுகின்றன என்பது குறித்த விஜய்யிடம் கேட்டதற்கு, தொழில்நுட்பக் கோளாறைச் சமாளிக்க மட்டுமே இவ்வாறாக செய்யப்பட்டது என்றார். இதுகுறித்து விரிவாக கூறிய அவர், “எங்களிடம் மெட்டாவால் அங்கீகரிக்கப்பட்ட பல Disclaimerகள் உள்ளன. ஒரு விளம்பரத்தை இயக்கத் தேவைப்படும்போது சில Disclaimerகள் வேலை செய்யாமல் போகலாம், அச்சமயம் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு Disclaimerக்கு மாற வேண்டும்” என்றார்.
விளம்பரங்கள் வெவ்வேறு Disclaimerகளின் கீழ் வெளியிடப்பட்டாலும் "Ellorum Nammudan" மற்றும் "Stalinin Kural" ஆகியவை திமுகவால் நடத்தப்படும் பக்கங்கள் என்பது பொதுமக்களிடையே தெளிவாகத் தெரிகிறது என்கிறார் விஜய்.
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகரின் ஆன்லைன் பிரச்சாரங்களை நிர்வகித்த கான்செப்ட் கம்யூனிகேஷனின் டிஜிட்டல் ஆய்வாளர் கிரண்நாத், “சந்திரசேகருக்கு தேர்தல் விளம்பரங்களை வெளியிடவதற்காக எங்கள் குழு பல புதிய பேஸ்புக் பக்கங்களை தொடங்கியதாக” கூறினார். மேலும், “இவ்விளம்பரங்கள் பாஜக அல்லது சந்திரசேகர் ஆகியோருக்கான நேரடி தொடர்பை வெளிப்படுத்தாமல், வெவ்வேறு Disclaimerகளுடன் வெளியிடப்பட்டன” என்றார்.
அதிகாரப்பூர்வ கணக்குகள் மூலம் சுய விளம்பரம் செய்வதை விட மூன்றாம் தரப்பினரால் வெளியிடப்படும் விளம்பரம் அல்லது பினாமி விளம்பரங்கள் மூலம் தன்னை விளம்பரப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கிரண் குழு நம்புகிறது.
பினாமி விளம்பரங்களை வெளியிட இக்குழு பயன்படுத்திய இரண்டு பக்கங்களான Change4TVM மற்றும் TVM Talks ஆகியவை கேரளாவில் இருந்து Meta Ad Library அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்தில் முதல் பத்து அரசியல் விளம்பரதாரர்களில் பட்டியலில் ஒன்றாக இருந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து 3 முறை எம்.பி.யான காங்கிரஸின் சசி தரூரிடம் சந்திரசேகர் சுமார் 15000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவில் சமூகத்தின் அக்கறை
இந்தியாவில் முதல் கட்டத் தேர்தலுக்கு சற்று முன்பு, பல சமூக செயல்பாட்டுக் குழுக்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) பினாமி விளம்பரங்கள் குறித்து கடிதம் எழுதின. அக்கடிதம் அரசியல் கட்சிகளின் செலவினங்களை முறையான மற்றும் முறைசாரா வழிகளில் கண்காணிப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டியது. தேர்தல்களின் போது சமூக தளங்களின் நெறிமுறையுடன் கூடிய பயன்பாட்டை உறுதி செய்யும் நோக்கில், மார்ச் 2019ல் வெளியிடப்பட்ட "தன்னார்வ நெறிமுறைகள்" குறித்தும் அக்கடிதம் விமர்சித்துள்ளது. வெளிப்படைத்தன்மை இன்மை, பிணைப்பு இல்லாத தன்மை மற்றும் சமூக வலைதளங்களில் விதிமீறல்களைப் புகாரளிப்பதற்கான வழிமுறை இல்லாதது ஆகியவற்றை அந்தக் கடிதம் சுட்டிக்காட்டியிருந்தது.
சுதந்திரமான அமைப்பு ஒன்றின் தலைமையில் வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறை மூலம் உருவாக்கப்பட வேண்டிய, தெளிவான அமலாக்க வழிகாட்டுதல்கள் மற்றும் அறிக்கையிடல் வழிமுறைகளைக் கொண்ட கட்டுப்படுத்தும் மாதிரி நடத்தை விதிமுறைகளை (MCC) உருவாக்க அக்குழுக்கள் வலியுறுத்தின.
மெட்டாவில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பொறுப்பேற்பது குறித்து விஜய் தெளிவுபடுத்தினார், “வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மற்ற பக்கங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படுவதில்லை.
கூகுளில் ஒவ்வொரு தேர்தல் விளம்பரத்திற்கும், கிரியேட்டிவ் ஐடியுடன் கூடிய தேர்தல் ஆணையத்தின் சரியான முன் சான்றிதழ்(Pre-certificate) தேவை. முன் சான்றிதழை பதிவேற்றிய பிறகு இந்த கிரியேட்டிவ் ஐடியை உள்ளிட வேண்டும். இருப்பினும், மெட்டாவில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு அத்தகைய தேவை எதுவும் இல்லை.
மெட்டாவின் பதில்
அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பினாமி பக்கங்கள் Meta Ad Systemஐ எவ்வாறு தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறித்து மெட்டாவிடம் மின்னஞ்சல் வாயிலாக கருத்து கேட்டோம். அதற்கு, “விளம்பரங்களில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து அதே தவறை செய்யும் விளம்பரதாரர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. தேர்தல்கள் அல்லது அரசியலைப் பற்றிய விளம்பரங்களை வெளியிட விரும்புபவர்கள் எங்கள் தளங்களில் தேவைப்படும் அங்கீகாரச் செயல்முறையை பின்பற்ற வேண்டும் மற்றும் அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்று மெட்டாவின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளனர்.