தமிழ்நாடு ஊர்தியில் தமிழ் இல்லாமல் இந்தி என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், குடியரசு தின விழாவில் இடம்பெற்ற தமிழ்நாடு ஊர்தியல் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக பகிரப்பட்டு வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய ஆய்வைத் தொடங்கினோம்.
முதலில், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் மொழி இடம்பெற்றதா என்பதைச் சரிபார்க்கத் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தோம்.
அந்தப் புகைப்படங்களில் அலங்கார ஊர்தியின் பக்கவாட்டுப் பகுதிகளில் ‘தமிழ்நாடு’ என்று மிகத் தெளிவாகத் தமிழில் எழுதப்பட்டிருந்தது உறுதியானது. இதன் மூலம் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டது என்ற தகவல் தவறானது எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஊர்தியின் முகப்பில் இந்தி இடம்பெற்றதற்கான காரணம் குறித்துத் தேடியபோது, குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளுக்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளைக் காண முடிந்தது.
அந்த வழிகாட்டுதல்களின்படி, அலங்கார ஊர்தியின் முன்பக்கத்தில் மாநிலத்தின் பெயர் இந்தியிலும், பின்பக்கத்தில் ஆங்கிலத்திலும், பக்கவாட்டுப் பகுதிகளில் அந்தந்த மாநில மொழியிலும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த பொதுவான விதிமுறையைப் பின்பற்றியே தமிழக ஊர்தியின் முகப்பில் இந்தி இடம்பெற்றுள்ளது.
மேலும், டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பின் முழுப்பதிவு தூர்தர்ஷனின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதன் 1:49:20 முதல் 1:50:11 வரையிலான பகுதியை ஆராய்ந்தபோது தமிழ்நாடு மட்டுமல்லாமல், அஸ்ஸாம், குஜராத் உள்ளிட்ட மந்திரங்களின் அலங்கார ஊர்திகளின் முகப்பு பக்கங்களில் இந்தியிலேயே அம்மாநில பெயர் எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது.
Conclusion:
முடிவாக நம் தேடலில் டெல்லி குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாட்டு அலங்கார ஊர்தியில் இந்திக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானது, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலையான வழிகாட்டுதலின்படி, ஊர்தியின் முன்பக்கத்தில் இந்தி பயன்படுத்தப்பட்டுள்ளது; அதே வேளையில் பக்கவாட்டுப் பகுதிகளில் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.