Fact Check: சேலஞ்ச் ஓட்டு , டெண்டர் ஓட்டு என பரவும் தகவல்? உண்மை என்ன

சேலஞ்ச் ஓட்டு மற்றும் டெண்டர் ஓட்டு என்று இருவேறு தகவல்கள் தேர்தலையொட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Newsmeter Network
Published on : 31 March 2026 11:21 PM IST

Fact Check: சேலஞ்ச் ஓட்டு , டெண்டர் ஓட்டு என பரவும் தகவல்? உண்மை என்ன
Claim:தேர்தல் சமயத்தில் சவாலான வாக்கு (Challenge Vote) மற்றும் தற்காலிக வாக்கு (Tendered Vote) தொடர்பான பல்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் பதிவில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் பிரிவு 49A-ன் கீழ் சேலஞ்ச் ஓட்டு போடலாம் என்றும், 14 சதவீதத்திற்கு மேல் டெண்டர் ஓட்டுகள் பதிவானால் மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Fact Check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவலில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது.

இதன் உண்மைத்தன்மையை அறிய இச்சட்டம் குறித்து தேடினோம். அப்போது,

தேர்தல் விதிமுறைகளின்படி சேலஞ்ச் ஓட்டு என்பது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கானது அல்ல. ஒரு வாக்காளர் வாக்களிக்க வரும்போது, அவருடைய அடையாளம் குறித்து அங்குள்ள பூத் ஏஜெண்டிற்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தி அந்த வாக்காளரின் அடையாளத்தை சவாலுக்கு உட்படுத்தலாம்.

தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடத்தப்படும் இந்த விசாரணையில் வாக்காளரின் ஆவணங்கள் சரியாக இருந்தால் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார், இல்லையெனில் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஒருவர் வாக்களிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். வெறும் அடையாள அட்டை மட்டும் இருந்தால் வாக்களிக்க முடியாது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும்.

மேலும் இந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு 49A என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த சட்டப்பிரிவே தவிர, அது சேலஞ்ச் ஓட்டுக்கானது கிடையாது.

அதேபோல் ஒருவரின் வாக்கை வேறொருவர் கள்ள ஓட்டாகப் பதிவு செய்துவிட்ட நிலையில், உண்மையான வாக்காளர் தனது அடையாளத்தை நிரூபித்து வாக்களிக்கும் முறையே டெண்டர் ஓட்டு எனப்படுகிறது. இதில் வாக்காளர் மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க முடியாது, மாறாக 17B படிவத்தைப் பெற்று வாக்குச்சீட்டு மூலமாகவே தனது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த வாக்குகள் சீலிடப்பட்ட உறையில் தனியாக வைக்கப்படுமே தவிர, பொதுவான வாக்கு எண்ணிக்கையின்போது இவை எண்ணப்படாது. வேட்பாளர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்து, நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே இந்த டெண்டர் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும்.

முக்கியமாக 14 சதவீதத்திற்கு மேல் டெண்டர் வாக்குகள் பதிவானால் அந்தத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று பரவும் செய்தியும் முற்றிலும் தவறானதாகும். தேர்தல் ஆணையத்தின் விதிகளில் அத்தகைய நடைமுறை எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Conclusion:

நம் தேடலின் முடிவாக அடிப்படை ஆதாரமற்ற மற்றும் தவறான சட்டப்பிரிவுகளைக் கொண்ட இத்தகைய போலிச் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், உண்மை நிலையை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் பதிவில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன
Next Story