பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஹிஜாப் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நகைகள் விற்பனை செய்யப்பட மாட்டாது என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக 'தினகரன்' ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அந்த நியூஸ் கார்டில் குறிப்பிட்ட இடம் (ஊர் அல்லது மாநிலம்) இடம்பெறாததால், இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முடிவு என்று பலரும் தவறாகப் புரிந்துகொண்டு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் அறிவிப்பு உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்டது என்று தெரியவந்தது.
இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை அறிய கூகுளில் தேடியபோது, கடந்த ஜனவரி 11ஆம் தேதி 'சமயம் தமிழ்' வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், "நகைக் கடையில் புது ரூல்ஸ்.. புர்கா அணிந்து வரக் கூடாது.." என்ற தலைப்பில் வாரணாசி நகை வியாபாரிகள் சங்கத்தின் முடிவு குறித்து விளக்கப்பட்டிருந்தது.
அதில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் (UPJA), சமீபகாலமாக அதிகரித்து வரும் திருட்டு மற்றும் மோசடி சம்பவங்களைத் தவிர்க்க ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, பாதுகாப்பு கருதி புர்கா, மாஸ்க், ஹெல்மெட் மற்றும் முகம் மறைக்கும் துணிகளை அணிந்து வருவோருக்கு நகைகளை விற்பனை செய்ய வேண்டாம் என அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை The Hindu ஊடகமும் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
Conclusion:
முடிவாக, நகைக்கடைகளில் ஹிஜாப் மற்றும் முகம் மறைக்கும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு மட்டுமே பொருந்தும்.