“4000 கோடி என்னதான் பண்ணாங்க அப்படியே ஆட்டைய போட்டுடானுக. சென்னை புளியந்தோப்பு மக்கள் உதவநிதி போட்டோ ஷூட் சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டது” என்ற தகவலுடன் சமீபத்தில் சென்னையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புளியந்தோப்பு பகுதி மக்கள், அரசை கடுமையாக விமர்சிப்பதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2023ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, “அப்பாட்டக்கரா நீ ? ஒட்டு கேட்டு வாங்க | வெளுத்து வாங்கிய புளியந்தோப்பு மக்கள்” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலியை 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி NewsGlitz Tamil ஊடகம் வெளியிட்டிருந்தது.
அதன், 00:40 முதல் 1:26 வரையிலான பகுதியில் வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய அதே கருப்பு நிற புடவை அணிந்துள்ள பெண் அரசை சரமாரியாக கேள்வி கேட்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், மிக்ஜாம் என்ற ஹாஷ்டாகுடன் அக்காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, மிக்ஜாம் புயல் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி, மிக்ஜாம் புயல் ஆந்திராவின் நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையில் கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
Conclusion:
நம் தேடலில் முடிவாக சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையின் புளியந்தோப்பு பகுதி மக்கள் அரசை விமர்சிப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய காணொலி என்று தெரியவந்தது.