வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்றும், முடிவுகள் மே 4ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துச்சாமி அவர்கள், ஈரோட்டில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்குவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. "தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு அமைச்சர் முத்துச்சாமி பரிசு வழங்குகிறார்; இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துமா?" என்று பகிரப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்தக் காணொலியின் உண்மைத்தன்மையை அறிய, அதன் குறிப்பிட்ட காட்சிகளை 'கூகுள் ரிவர்ஸ் இமேஜ்' தேடல் மூலம் ஆய்வு செய்தோம். எங்களது தேடலில் மார்ச் 25, 2023ஆம் ஆண்டு விகடன் ஊடகம் இதே காணொலி காட்சிகள் அடங்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மேற்கு தொகுதியில் சுமார் 400 பேருக்கு அமைச்சர் முத்துச்சாமி பரிசுப் பெட்டகங்களை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 17, 2023ஆம் ஆண்டு News Uriyadi, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கிய போது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை என்று News Uriyadi செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
‘Minister Muthusamy Team' என்ற அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் டிசம்பர் 24, 2023ஆம் ஆண்டு இது தொடர்பான புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
Conclusion:
முடிவாக நம் தேடலில், அமைச்சர் முத்துச்சாமி தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பரிசு வழங்குகிறார் என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது. வைரலாகும் காணொலி, 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது நலத்திட்ட உதவிகள் வழங்கிய பழைய காட்சிகளாகும். இதற்கும் தற்போதைய தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.