Fact Check: 'லவ் ஜிஹாத்' என்ற பெயரில் இந்து பெண்ணை தாக்கும் இஸ்லாமியர்? வைரல் காணொலியின் உண்மை பின்னணி
பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இஸ்லாமியர் தனது இந்து மனைவியை தாக்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By - Newsmeter Network |
Claim:பெங்களூரு ஐடி ஊழியர் ஒருவர் (இஸ்லாமியர்) தனது இந்து மனைவியைத் தாக்குவது தொடர்பான காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் காணொளியில் இருப்பவர்கள் இருவருமே இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள்
“பெங்களூருவில் ஒரு பெண் ஐடி நிபுணர் முகமது முஷ்டாக்கை மணந்தார். அவர்கள் தங்கள் குழந்தையின் பிறந்தநாளில் இந்து சடங்குகளின்படி விளக்கேற்றினர். அவர் அவளை எப்படி நடத்தினார் என்று பாருங்கள். இதை ஒவ்வொரு இந்து பெண்ணும், முழு நாடும் பார்க்க வேண்டும்” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதிவு
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் அதில் இருப்பவர்கள் இஸ்லாமிய தம்பதிகள் என்று தெரியவந்தது.
காணொலியில் இருக்கும் தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். பின்னர், 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா டுடே , திவ்யா மராத்தி மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தன. அதன்படி, இச்சம்பவம் 2015ஆம் ஆண்டு நடந்தது.
Times of India வெளியிட்டுள்ள செய்தி
காணொலியில் காணப்படும் நபர் 'முகமது முஷ்டாக்'. அந்தப் பெண் அவரது மனைவி 'ஆயிஷா பானு', அவர்கள் 2009ல் திருமணம் செய்து கொண்டனர். முஷ்டாக் பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர்களுக்கு 'ஷஹ்ரான்' என்ற மகன் இருந்தான், அவன் 2013ல் பிறந்தான். முஷ்டாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயிஷாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டில், தம்பதியினர் தங்கள் மகனின் பிறந்தநாளை ஒரு ஹோட்டலில் கொண்டாடியபோது, நிகழ்வை காட்சி படுத்துவதற்காக முஷ்டாக் கேமராவை பொருத்திக் கொண்டிருந்தபோது ஆயிஷா கேக்கில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தார். இதனால், கோபமடைந்த முஷ்டாக் ஆயிஷாவை மோசமாக தாக்கினார். இச்சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
ஆயிஷா கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வந்தார். தனது கணவர் மீது குடும்ப வன்முறை தொடர்பான வழக்கை பதிவு செய்துள்ளார். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். முஷ்டாக் ஆயிஷாவுக்கு விவாகரத்து கொடுக்க மறுத்துவிட்டு வேறொரு பெண்ணை மணந்தார். நிலைமையை ஆயிஷா விளக்கும் காணொலியை Humans of Bombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டில், கர்நாடக உயர்நீதிமன்றம், ஒரு முஸ்லிம் மனைவி தனது கணவரின் இரண்டாவது திருமணம் காரணமாக தனது மாமியாரிடமிருந்து பிரிந்து வசிக்கும் போது, தனது ஒரே மைனர் குழந்தையை தனது காவலில் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆயிஷா மற்றும் முஷ்டாக் இருவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, பெங்களூருவில் ஐடி வேலை பார்த்து வரும் முஷ்டாக் என்பவர் தனது இந்து மனைவியை தாக்குவதாக வைரலாகும் காணொலியில் இருக்கும் ஆணும் பெண்ணும் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்தது.