திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் ஜவுளி நிறுவனங்கள் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவது இயல்பான ஒன்று. அந்த வகையில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'போதீஸ்' நிறுவனம் இணையதளப் போட்டி ஒன்றை நடத்துவதாகவும், அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிப்பவர்களுக்கு ரூ.50,000 வரை பரிசு வழங்கப்படுவதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் இணைய லிங்க் ஒரு ஸ்பேம் என்று தெரியவந்தது.
இந்தத் தகவல் உண்மையா என்பதை அறிய 'போதீஸ்' நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தோம். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மட்டுமே தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணமாகப் பரிசு வழங்கும் திட்டம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அங்கில்லை. மேலும், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இவ்வாறான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
பரிசு வழங்குவதாகக் கூறப்படும் அந்த இணையதள லிங்கை ஆராய்ந்து பார்த்தபோது. அதில் கேட்கப்படும் நான்கு கேள்விகளுக்குப் பதிலளித்தவுடன், "நீங்கள் ரூ.50,000 வெல்ல வாய்ப்புள்ளது" என்ற செய்தி தோன்றுகிறது. தொடர்ந்து ஒன்பது பெட்டிகளில் ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்லி, இறுதியில் அந்தப் பரிசைப் பெற "இந்தத் தகவலை 5 வாட்ஸ்அப் குழுக்களுக்கோ அல்லது 20 நண்பர்களுக்கோ பகிர வேண்டும்" என நிபந்தனை விதிக்கிறது.
பொதுவாக ஸ்பேம் இணையதளங்கள் தான் இவ்வாறு தகவலை பலருக்கு அனுப்பக்கூறி இயங்கும், இதன் மூலம் வைரலாகும் இணைய லிங்கும் ஸ்பேம் என்று தெரியவருகிறது.
Conclusion:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'போதீஸ்' நிறுவனம் ரூ.50,000 பரிசு வழங்குவதாகப் பரவும் தகவல் ஸ்பேம் என்று தெரியவந்தது.