Fact Check: இஸ்லாமியர்களை ஈரானில் இருந்து மீட்டாரா பிரதமர் மோடி? உண்மை அறிக

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியில் ஈரானில் சிக்கி இருந்த இஸ்லாமியர்கள் மீட்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

By Newsmeter Network
Published on : 21 Jan 2026 2:43 AM IST

Fact Check: இஸ்லாமியர்களை ஈரானில் இருந்து மீட்டாரா பிரதமர் மோடி? உண்மை அறிக
Claim:பிரதமர் நரேந்திர மோடியின் துரித நடவடிக்கையால் ஈரானில் இருந்து இஸ்லாமியர்கள் தாயகம் திரும்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் காணொலி ‘ஆபரேஷன் சிந்துவின்’ போது எடுக்கப்பட்ட பழைய காணொலி என்று தெரியவந்தது

ஈரானில் சிக்கியிருந்த இஸ்லாமியர்களை, பிரதமர் நரேந்திர மோடி தற்போது பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளதாகக் கூறி ‘ஸ்ரீ டிவி’ (Sri TV) ஊடகத்தில் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியுடன் பகிரப்படும் காணொலியில், இஸ்லாமியப் பெண் ஒருவர் விமான நிலையத்தில் இருந்தபடி "ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" என்று உற்சாகமாக முழக்கமிட்டு வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


Fact check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி ‘ஆபரேஷன் சிந்துவின்’ போது எடுக்கப்பட்டது தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மைத்தன்மையை அறிய, அதன் குறிப்பிட்ட காட்சிகளை ‘கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்’ செய்து பார்த்தோம். அப்போது ஜூன் 21, 2025 அன்று NDTV ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது தெரியவந்தது.


அதில், “ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்து' (Operation Sindhu) என்ற மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ஈரானில் இருந்து மீட்கப்பட்டனர். அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் "ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" என முழக்கமிட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஜூன் 23, 2025 அன்று DD News வெளியிட்ட செய்தியில், 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ் ஈரானின் மஷ்ஹத் (Mashhad) நகரிலிருந்து 285 இந்தியர்கள் தாயகம் திரும்பியதாகவும், அவர்களை மத்திய இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா வரவேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானிலிருந்து மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,713-ஆக உயர்ந்தது என்பதையும் அந்தச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

Conclusion:

முடிவாக நம் தேடலில், வைரலாகும் இக்காணொலி தற்போதைய நடைபெற்ற நிகழ்வு அல்ல என்பது உறுதியாகிறது. இது கடந்த ஜூன் 2025-ல் ஈரான் - இஸ்ரேல் தாக்குதலின் போது, 'ஆபரேஷன் சிந்து' திட்டத்தின் கீழ் இந்தியர்களை மீட்டபோது எடுக்கப்பட்ட பழைய காணொலியாகும். இதனைத் தற்போது பிரதமர் மோடி ஈரானில் சிக்கிய இஸ்லாமியர்களை மீட்டதாகக் கூறித் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது‌‌. வைரலாகும் காணொலி ‘ஆபரேஷன் சிந்துவின்’ போது எடுக்கப்பட்ட பழைய காணொலி என்று தெரியவந்தது
Next Story