“டேங்கர் கப்பல் கைப்பற்றப்பட்டதற்குப் பதிலடியாக, ரஷ்யா அமெரிக்காவை ஏவுகணைத் தாக்குதல் மூலம் அச்சுறுத்துகிறது” என்ற தகவல் காணொலியுடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஏவுகணை சோதனையின் போது எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்த முறைக்கு உட்படுத்திய போது Wion News என்ற ஊடகம் 2018ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியுடன் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், "ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்பியுள்ளது. ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நான்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதே தேதியில் வாய்ஸ் ஆப் அமெரிக்கா என்ற யூடியூப் சேனலில் அதே காணொலி வெளியிடப்பட்டு இருந்தது. அதிலும், "ரஷ்யாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் நான்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. மாஸ்கோவை நிறுவிய இடைக்கால இளவரசரின் நினைவாக 'யூரி டோல்கோருக்கி' என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், வெள்ளைக் கடலில் மூழ்கிய நிலையில் இருந்து ஒரே ஒரு தாக்குதலில் புலாவா ஏவுகணைகளை ஏவியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் எடுத்துச் சென்ற போலி போர்முனைகள், ரஷ்யாவின் எதிர் பக்கத்தில் உள்ள பயிற்சி இலக்குகளை அடைந்தன - தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள குரா துப்பாக்கிச் சூடு தளம்.
இந்தப் பயிற்சி, பல அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய மற்றும் 9,300 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய நான்கு புலவா ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவுவதற்கான முதல் நிகழ்வாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக ரஷ்யா அமெரிக்காவை ஏவுகணை மூலமாகவும் தாக்கியதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் அது 2018ஆம் ஆண்டு மே மாதம் ரஷ்யா நடத்திய ஏவுகணை சோதனையின் போது எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.