துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில், தென்மண்டல திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்நிலையில், அவர் மேடைக்கு நடந்து வரும்போது, அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டதைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது என்று தெரியவந்தது.
இத்தகவலின் உண்மைத்தன்மையை அறிய, முதலில் இவ்வாறு நிகழ்வு நடைபெற்றதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் பதிவாகவில்லை. தொடர்ந்து, விருதுநகர் மாநாடு குறித்து பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட நேரலை மற்றும் செய்திப் பதிவுகளை ஆய்வு செய்தோம்.
அப்போது, சத்யம் டிவி தனது யூடியூப் சேனலில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி காணொலி வெளியிட்டிருந்தது. அதனை முழுமையாகப் பார்த்தபோது சரியாக 3:11 பகுதியில், தற்போது வைரலாகும் புகைப்படத்தில் உள்ள அதே காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்தப் பதிவில் எங்குமே முதலமைச்சர் மீது செருப்பு வீசப்பட்டதாகவோ அல்லது மேடையை நோக்கி ஏதேனும் பொருட்கள் பறந்து வந்ததாகவோ எந்தவொரு காட்சியும் இல்லை.
மேலும், புகைப்படத்தை Photo Forensic இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் செருப்பு வைக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக விருதுநகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் முகமது ஜெய்லானியுடன் நியூஸ்மீட்டர் பேசியது. அந்தக் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், வைரல் பதிவில் கூறப்பட்டுள்ளபடி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார். கூட்டத்தில் முதல்வர் மீது யாரும் காலணிகளை வீசாததால், செருப்பு வீசப்படுவதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இதிலிருந்து, முதலமைச்சர் நடந்து வரும் உண்மையான காணொலியில் இருந்து ஒரு பகுதியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அதில் செருப்பு இருப்பது போலத் எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
Conclusion:
முடிவாக, விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணி மாநாட்டின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது செருப்பு வீசப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.