தமிழ்நாட்டில் இருந்து மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. அங்கு ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, தொடக்கப் பள்ளி மாணவிகளைத் தனது கால்களை மசாஜ் செய்யுமாறு கேட்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் உள்ள சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது என்று தெரியவந்தது.
இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொளியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது NDTV ஊடகம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “இந்தச் சம்பவம் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தபள்ளி பழங்குடியினர் பெண்கள் ஆசிரமப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது.
அந்த காணொலியின் பின்னணி, இச்சம்பவம் பள்ளி நேரத்தில் நடந்திருப்பதைக் காட்டுகிறது. இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆசிரியரின் பராமரிப்பில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு இழைக்கப்படும் நடத்தைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
இந்த விவகாரம், சீதம்பேட்டை ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையின் (ITDA) திட்ட அதிகாரி பவார் ஸ்வப்னில் ஜகந்நாத் உட்பட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை காணொலியாக Times of India ஊடகமும் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று The New Indian Express ஊடகம் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தமிழ்நாட்டில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, தொடக்கப் பள்ளி மாணவிகளைத் தனது கால்களை மசாஜ் செய்யுமாறு கேட்பதாக வைரலாகும் காணொலி உண்மையில் ஆந்திரம் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது என்று தெரியவந்தது.