கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்து, அவர்களை தனியார் ஆம்னி பேருந்து மூலம் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வரவழைத்து சந்தித்து பேசினார்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விஜயை சந்திக்கும் ஆர்வத்தில் பேருந்தில் இருந்து இறங்கி நடனமாடியதாக காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் சுற்றுலா பேருந்து நிறுவனம் வெளியிட்ட காணொலி என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொளியின் உண்மை தன்மையை கண்டறிய உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்னைக்கு புறப்பட்ட செய்தி ஏதேனும் வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது Galatta ஊடகத்தில் இதுதொடர்பான செய்தி வெளியாகியாகிருந்தது. அதில் பேருந்துகளில் YBM Travels என்று குறிப்பிட்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதே போல் சமயம் தமிழ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியிலும் YBM Travels என்றே பேருந்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது அக்டோபர் 24ஆம் தேதி, ditoholidays and vkt_transports ஆகிய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 'VKT Transports' என்ற சுற்றுலா பேருந்து நிறுவனம் வெளியிட்ட காணொலி என்பது தெரியவந்தது.
Conclusion:
எனவே, நம் தேடலில் பரவி வருவது 'VKT Transports' என்ற சுற்றுலா பேருந்து நிறுவனம் வெளியிட்ட வீடியோவாகும். இதனை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விஜயை சந்திக்க மகாபலிபுரம் செல்லும் வழியில் நடனமாடியதாக தவறாகப் பரப்புகின்றனர்.