“விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் சிறுவர்கள் போதை தலைக்கேறிய நிலையில், சக சிறுவனை மிருகத்தனமாக தாக்கும் இந்த காணொளி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில், போதைக்கு அடிமையாகி இப்படி சீரழிந்து கிடப்பதைப் பார்க்கும்போது இரத்தம் கொதிக்கிறது” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஒரு சிறுவனை சில சிறுவர்கள் சேர்ந்து தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை அறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது இந்தியா டுடே ஊடகம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதன்படி, விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புள்ளி நாயக்கனூர் என்ற ஊரில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும். ஒரு சிறுவன் கஞ்சா புகைத்ததாகவும், அதனை அவனது பெற்றோரிடம் கூறியதாகவும், அதற்காக அச்சிறுவன் தாக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தேடுகையில் வைரலாகும் காணொலி தொடர்பாக விளக்கப் பதிவு ஒன்றை விருதுநகர் காவல் துறையினர் தங்களது எக்ஸ் தளத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிட்டுள்ளனர். அதன்படி, பரப்பப்படும் காணொலி, கடந்த 15.12.2025 ஆம் தேதியன்று பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல் தொடர்பான பிரச்சினையின் போது எடுக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மிரட்டியதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தின் போது சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியதாகப் பரப்பப்படும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை” என்று காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் நியூஸ் மீட்டரிடம் கூறுகையில், வைரலாகும் தகவல் தவறானது என்றும் அச்சிறுவர்கள் எவ்வித போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகவில்லை என்றும் தெளிவுபடுத்தினர்.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் விருதுநகர் மாவட்டத்தில் போதையினால் சிறுவர்கள் ஒரு சிறுவனை தாக்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அச்சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகவில்லை என்றும் தெரியவந்தது.