“திருச்சி ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது” என்ற தகவலுடன் தினகரன் ஊடகம் செய்தி வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதுகுறித்து உண்மையை அறிக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, அதே தினகரன் ஊடகம் கடந்த ஜனவரி 21ஆம் தேதி யூடியூப் ஷார்ட்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “குஜராத்: ரூ.21 கோடி செலவில் கட்டப்பட்ட தண்ணீர் தேக்க தொட்டி, முதல் முறையாக தண்ணீர் நிரப்பும் போது இடிந்து விழுந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரலாகும் காணொலியில் உள்ள திருச்சி என்ற இடத்திற்கு பதிலாக குஜராத் என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது இதன் மூலம் இச்சம்பவம் குஜராத்தில் நடைபெற்றது என்பதை முதற்கட்டமாக நம்மால் அறிய முடிகிறது. தொடர்ந்து இதுகுறித்து தேடுகையில் NDTV இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி, “குஜராத் மாநிலம் சூரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்த பேரழிவைத் தொடர்ந்து, குஜராத் காவல்துறை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாநில நிர்வாகத்திற்கு "பெரும் அவமானம்" என்று வர்ணிக்கப்படும் இச்சம்பவத்தைக் கையாள்வதற்காக, காவல்துறை ஒரு குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 21 கோடி ரூபாய் மதிப்பிலான, காய்பக்லா குழும குடிநீர் வழங்கல் திட்டத்தின் பெருமையாக இது இருக்க வேண்டியிருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக திருச்சியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி முதல்முறையாக தண்ணீர் நிரப்பப்பட்ட போது இடிந்து விழுந்ததாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் இச்சம்பவம் குஜராத்தில் நடைபெற்றது என்றும் தெரியவந்தது.