“ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். 2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். தயவுசெய்து கீழே உள்ள பொத்தானை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள் - இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது” என்ற தகவலுடன் இணையதள லிங்குடன் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் ஸ்பாம் என்று தெரியவந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்ய வைரலாகும் இணை லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது, SBI வங்கியின் லோகோவுடன் “2025 அரசு பொதுமக்கள் உதவித் திட்டம் விரைவில் முடிவடைகிறது - ஒவ்வொரு இந்திய குடிமகனும் ரூ.30,000 பெற முடியும். இப்போது பெறுங்கள்!” என்று குறிப்பிட்டு “உதவித் தொகையைப்” என்று கிளிக் செய்யும் இடம் இடம்பெற்றுள்ளது.
அதனை கிளிக் செய்தபின் தொலைபேசி எண்ணை பதிவிடும்படி ஒரு பக்கம் திறக்கிறது. அதில், தொலைபேசி எண்ணை பதிவிட்டு தொடர்ந்து “அடுத்து” என்பதை கிளிக் செய்தால் ரூபாய் 30,000 பரிசுத்தொகையை பெற வேண்டும் என்றால் இத்தகவலை 5 குழுக்களுக்கோ அல்லது 15 நண்பர்களுக்கோ WhatsApp-ல் பகிரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக ஸ்பேம் இணையதளங்கள் தான் இவ்வாறு தகவலை பலருக்கு அனுப்பக்கூறி இயங்கும், இதன் மூலம் வைரலாகும் இணைய லிங்கும் ஸ்பேம் என்று தெரியவருகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூபாய் 30,000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் மற்றும் இணைய லிங்க் ஸ்பேம் என்று தெரியவந்தது.