"ராணியின் இறுதி வேண்டுகோளுக்கு இணங்க தமிழகத்தைச் சேர்ந்த சீமான் என்பவருக்கும், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவரை(சீமானை) ஒருபோதும் ராணி சந்தித்ததும் இல்லை என்றும் அவர் வருங்காலங்களில் எந்த கதை கூறினாலும் அது ராணியையும் அரசு குடும்பத்தையும் எவ்விதத்திலும் தொடர்பு படுத்தாது" என்று இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகத் தொடங்கிய பிறகு, ராணி எலிசபெத் உயிர் பிரிவதற்கு முன்பாக அவருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே எந்த சந்திப்பும் நடைபெறவில்லை எனத் தெரிவித்து கடந்த 8-ம் தேதி 'ராயல் கம்யூனிகேஷன் (Royal communication)' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது போன்ற புகைப்படம் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்த உண்மைத் தன்மையைக் கண்டறிய முயற்சித்தோம். அதன்படி, பிரிட்டன் ராணி எலிசபெத் மரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமான 'தி ராயல் பேமிலி' பக்கத்தில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது. அதற்குப் பிறகு 'ராயல் கம்யூனிகேஷன்' எனும் தலைப்பில் வேறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், வைரலான அறிவிப்பைப் பார்க்கும் போது, அது நாம் தமிழ் கட்சியின் சீமானை நையாண்டி செய்வதற்காக எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இப்போலியான அறிவிப்பை மையமாக வைத்து சீமானை பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நீயூஸ்மீட்டரின் உண்மைக் கண்டறிதலின் படி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், சீமானை சந்தித்ததில்லை என அரச தொடர்பு தரப்பில் வெளியிட்டதாக பரப்பப்படும் அறிவிப்பு போலியானது என்றும் நையாண்டிக்காக எடிட் செய்யப்பட்டது எனவும் அறிய முடிகிறது.