Fact Check: இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 102 டன் தங்கம்; காங்கிரஸ் ஆட்சியில் அடமானம் வைக்கப்பட்டதா?

காங்கிரஸ் ஆட்சியில் இங்கிலாந்து வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட 102 டன் தங்கம் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  1 Nov 2024 7:54 PM GMT
Fact Check: இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 102 டன் தங்கம்; காங்கிரஸ் ஆட்சியில் அடமானம் வைக்கப்பட்டதா?
Claim: இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 102 டன் தங்கம் காங்கிரஸ் ஆட்சியில் அடமானம் வைக்கப்பட்டது என்று வைரலாகும் தகவல்
Fact: இத்தகவல் தவறானது. உண்மையில், அத்தங்கம் பிரதமர் சந்திரசேகரின் ஆட்சி காலத்தில் அடமானம் வைக்கப்பட்டு பின்பு மீட்கப்பட்டு இந்தியாவிற்கு சொந்தமான தங்கமாக இருந்து வந்தது. இதுவே தற்போது இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

“தீபாவளியை முன்னிட்டு பாரதத்திற்கு சிறப்பு பரிசாக 102 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கிகளில் இருந்து மீட்டு கொண்டு வந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு. உங்களுக்கு இது ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.. இத்தாலி மாஃபியா குடும்பத்தின் கொள்ளைகார குடும்பத்தின் அவல ஆட்சியினால் 405 டன் தங்கம் இங்கிலாந்து வங்கியில் அடகு வைக்கப்பட்டது.

அடுத்த மாதம் சம்பளத்தை கூட அரசாங்க பணியாளர்களுக்கு தர முடியாத நிலைக்கு பாரதத்தின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிய காங்கிரஸ் அரசு இங்கிலாந்து வங்கியிலும் ஸ்விசர்லாந்து வங்கியிலும் நமது தங்கத்தை அடமானம் வைத்த அவலத்தை பலர் மறந்திருக்கலாம்.

அவ்வாறு அடகு வைக்கப்பட்ட தங்கத்தில் பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதுவரை 214 டன் தங்கத்தை மீட்டு பாரதத்திற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மக்களே. ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜெய். சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியில் இங்கிலாந்து வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட 102 டன் தங்கம் தற்போது நரேந்திர மோடி அரசாங்கத்தால் மீட்கப்பட்டுள்ளதாக கூறி இதனை பரப்பி வருகின்றனர்.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த அக்டோபர் 30ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கம் தொடர்பாக India Today செய்தி வெளியிட்டிருந்தது.


India Today வெளியிட்டுள்ள செய்தி

இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கம்:

அதில், “பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகங்களிலிருந்து 102 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி சமீபத்தில் இந்தியாவிற்கு கொண்டுவந்தது. இந்த பரிமாற்றமானது மதிப்புமிக்க சொத்துக்களை இந்தியாவில் வைத்திருப்பதில் மத்திய ரிசர்வ் வங்கியின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

செப்டம்பர் 2022ஆம் ஆண்டு முதல், இந்தியா 214 டன் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளது. ரிசர்வ் வங்கி தனது செல்வத்தை இந்தியாவிற்குள் வைத்திருக்க விரும்புகிறது. மொத்தம் 855 டன்கள் தங்க கையிருப்புடன், ரிசர்வ் வங்கி தற்போது நாட்டிற்குள் 510.5 டன் தங்கத்தை வைத்திருக்கிறது. வளர்ந்து வரும் சர்வதேச பதட்டங்கள் மற்றும் பொருளாதார சவால்களின் பின்னணியில் இந்தியாவினுடைய தங்க இருப்பில் ஒரு பகுதியை நாட்டிற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இத்தங்கம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இங்கிலாந்தில் அடமானம் வைக்கப்பட்டதா என்பது குறித்து தேடினோம். அப்போது, அக்டோபர் 30ஆம் தேதி First Post இதுகுறித்த விளக்க கட்டுரையை வெளியிட்டிருந்தது.

ஏன் இத்தங்கம் வெளிநாட்டில் வைக்கப்பட்டுள்ளது?

அதன்படி, “பெரும்பாலான நாடுகள் தங்களுடைய சில தங்க இருப்புக்களை வெளிநாட்டு பெட்டகங்களில் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு சேமித்து வைக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, பாங்க் ஆஃப் இங்கிலாந்து தவிர, சுவிட்சர்லாந்தின் பாசலில் உள்ள Bank for International Settlements (BIS) மற்றும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் தங்க இருப்புக்களை சேமித்து வைக்கிறது.

நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இந்த தங்கம் 1990இல் இங்கிலாந்து வங்கிக்கு மாற்றப்பட்டது. அந்த நேரத்தில், பிரதமர் சந்திரசேகரின் (இந்திய தேசிய காங்கிரஸின் வெளிப்புற ஆதரவுடன் ஜனதா தளத்தின் பிரிந்த பிரிவின் சிறுபான்மை அரசாங்கத்திற்கு பிரதமர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார் என்று 1990ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது) அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்தது மற்றும் நாட்டின் இருப்புநிலை மிகவும் மோசமாக இருந்தது. அச்சமயம் மத்திய வங்கி 1 பில்லியன் டாலருக்கும் குறைவான அந்நியச் செலாவணி கையிருப்பைக் கொண்டிருந்தது, இது மூன்று வாரங்களுக்கு இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.

1991ல் திருப்பி செலுத்தப்பட்ட கடன்:

இந்த நிதி நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் எஸ். வெங்கிடராமன், தங்கத்தை அடமானமாக வழங்கி சர்வதேச வங்கிகளிடம் இருந்து பணம் திரட்டும் யோசனையை முன்வைத்தார். இது ஒரு நடைமுறை நடவடிக்கை என்பதை உணர்ந்து, மே 1991 இல், சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு குத்தகைக்கு விட அரசாங்கம் முடிவு செய்தது, அதையொட்டி சுவிஸ் வங்கிக்கு விற்று 200 மில்லியன் டாலர்கள் திரட்டியது. ஆர்பிஐ, இங்கிலாந்து வங்கி மற்றும் ஜப்பான் வங்கியுடன் 400 மில்லியன் டாலர் கூடுதல் கடனுக்காக பேச்சுவார்த்தை நடத்தியது.

நவம்பர் 1991க்குள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்திய போதிலும், இந்தியா தங்கத்தை இங்கிலாந்தில் வைத்திருக்க முடிவு செய்தது. வெளிநாட்டில் தங்கத்தை சேமித்து வைப்பது, நாட்டிற்கு எளிதாக வர்த்தகம் செய்யவும், பரிமாற்றங்களில் ஈடுபடவும், வருமானம் ஈட்டவும் உதவுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி

Conclusion:

முடிவாக, நம் தேடலில் காங்கிரஸ் ஆட்சியில் இங்கிலாந்து வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்கம் தற்போது நரேந்திர மோடி அரசாங்கத்தால் மீட்கப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் 1990ஆம் ஆண்டு பிரதமர் சந்திரசேகரனின் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தங்கம் அடமானம் வைக்கப்பட்டு பெறப்பட்ட கடன் மீண்டும் 1991ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது என்றும் தற்போது இந்தியாவால் மீட்கப்பட்ட தங்கம் இந்தியாவிற்கு சொந்தமானது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், தற்போது மீட்கப்பட்ட தங்கம் அடமானம் வைக்கப்பட்டது இல்லை என்றும் தெரிய வருகிறது.

Claim Review:காங்கிரஸ் ஆட்சியில் அடமானம் வைக்கப்பட்ட தங்கம் மீண்டும் கொண்டுவரப்பட்டது
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில், அத்தங்கம் பிரதமர் சந்திரசேகரின் ஆட்சி காலத்தில் அடமானம் வைக்கப்பட்டு பின்பு மீட்கப்பட்டு இந்தியாவிற்கு சொந்தமான தங்கமாக இருந்து வந்தது. இதுவே தற்போது இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Next Story