“#அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., ரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் போகிறது. "#Blood_On_Call" என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், #ரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-. தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும். இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்” என்ற தகவலுடன் தமிழ்நாடு அரசின் லோகோவுடன் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இத்தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2014ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி DNA ஊடகம் இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “மராட்டிய மாநில அரசு ”ஜீவன் அம்ருதா சேவா” அல்லது ” blood on call ” எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி அவசர நிலையில் ரத்தம் தேவைப்படும் நபர்கள் 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் அவர்கள் இருக்கும் மாவட்ட ரத்த வங்கியில் இருந்து தேவையான ரத்தம் அனுப்பி வைக்கப்படும்.
இந்த திட்டத்தில், கொண்டு வரப்படும் ரத்தம் ஒரு பையிக்கு 450 ரூபாயும் உடன் சேர்க்க வேண்டிய இடம் 10 கிலோமீட்டருக்குள் இருந்தால் போக்குவரத்து கட்டணம் 50 ரூபாயாகவும், 11 முதல் 40 கிலோமீட்டராக இருந்தால் போக்குவரத்து கட்டணமாக 100 ரூபாயும் வசூலிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் மராட்டிய மாநிலத்தில் மட்டும் செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. மேலும், நாடு முழுவதும் செயல்பாட்டில் இருப்பதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
அதேசமயம், “மாநில சுகாதார அமைச்சர் தானாஜி சாவந்த் எடுத்த முடிவின்படி, குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிதல் மற்றும் பெண் சிசுக்கொலை புகார்களை நிவர்த்தி செய்ய மராட்டிய மாநில பொது சுகாதாரத்துறை 24 மணி நேரமும் கட்டணமில்லா உதவி எண் 104ஐத் தொடங்கியுள்ளது” என்று கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, 104 உதவி எண்ணில் சேவைகள் ஏதும் தமிழ்நாட்டில் செயல்படுகிறதா என்று தேடினோம். அப்போது, அந்த எண்ணில் இலவச மருத்துவ சேவை செயல்படுவது தெரியவந்தது. இது தொடர்பாக விகடன் கட்டுரை ஒன்றை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மேலும், “EMRI கிரீன் ஹெல்த் சர்வீசஸ் தமிழ்நாடு, குஜராத், கோவா மற்றும் டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் அரசாங்கத்துடன் இணைந்து "104 சுகாதார ஆலோசனை ஹெல்ப்லைன் சேவைகளை" இயக்குகிறது” என்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவில் தமிழ்நாடு அரசு லோகோவுடன் 104 இலவச எண்ணில் Blood On Call என்ற திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுவதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் அப்படியான ஒரு திட்டம் மராட்டிய மாநிலத்தில் மட்டும் செயல்பாட்டில் இருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், தமிழ்நாட்டில் 104 உதவி எண்ணில் இலவச மருத்துவ சேவை திட்டம் செயல்படுத்தப்படுவதும் நம் தேடலில் தெரியவந்தது.