"புகைப்படத்தில் இருப்பவர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் குழுவாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். குழந்தைகளை கடத்துவதற்காகவே இந்த 200 பேரும் வந்துள்ளனர். எனவே கவனமாக இருங்கள். மேலும், சந்தேகத்திற்கு இடமாக பிற மாநிலத்தவர்கள் யாரையும் கண்டால் அவர்கள் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும்" என்று கூறி 1 நிமிடமும் 22 விநாடிகளும் ஓடக்கூடிய ஆடியோவுடன் ஐந்து வடமாநிலத்தவர்களின் குழு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம் மற்றும் ஆடியோ
வைரலாகும் ஆடியோ
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் புகைப்படத்துடன் Check4Spam என்ற இணையதளத்தில் 2018ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி "200 குழந்தைக் கடத்தல்காரர்கள் பெங்களூரு வந்திருப்பதாகவும், அதில் 10 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்கள் கோடை விடுமுறையில் குழந்தைகளை கடத்த உள்ளனர்" என்ற தகவல் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், அத்தகவலில் உண்மை இல்லை என்று Check4Spam-ன் ட்விட்டர் பதிவிற்கு பெங்களூர் காவல்துறையினர், "இது போலியானது" என்று பதிலளித்துள்ளனர்.
பெங்களூரு காவல்துறையினரின் பதில் டுவிட்
இது தொடர்பாக 2018ம் ஆண்டு மே 11ம் தேதி விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது தி நியூஸ் மினிட். அதில், தற்போது வைரலாகும் அதே புகைப்படத்துடன் ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகவல் பரவியது என்றும் அவை அனைத்தும் பொய் என்றும் இது தொடர்பாக வேலூரைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குழந்தைகளைக் கடத்த 200க்கும் மேற்பட்டோர் குழுவாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் அவர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று பரவும் தகவல் வதந்தி என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.