Fact Check: 28 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

உலகத்திலேயே மிகப் பழமையான 28,450 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  21 Dec 2024 7:55 PM GMT
Fact Check: 28 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
Claim: 28,450 ஆண்டுகள் பழமையான சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Fact: இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இது பொய்யான தகவல் என்று வரலாற்று ஆய்வாளரே மறுத்துள்ளார்

“28 ஆயிரம் வருடத்துக்கு முன்னாடி செய்த சிவன் சிலை,,, மிரண்டு போன வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தகவல்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “மனித நாகரீகம் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று கூறுகின்றனர். ஆனால் 28,450 செய்யப்பட்ட சிலை ஒன்று இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் பழமையான நாகரீகங்கள் என்று கூறப்படும் எகிப்து, கிரேக்கம், மெசொப்பொத்தேமியா, மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்றவற்றிற்கு முன்பாகவே இந்த சிலை செய்யப்பட்டுள்ளதாக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ரேடியோ ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் இச்சிலையை வைக்கப்பட்டிருந்த மர பெட்டியை கார்பன் டேட்டிங் செய்தபோது 28,450 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது. இச்சிலை சிவன் அமர்ந்துள்ளது போன்றும் அவரது தலைக்கு மேல் பாம்பு இருப்பது போன்றும் தோற்றம் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இவை அனைத்தும் முற்றிலும் பொய்யான தகவல் என்பது தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, வைரலாகும் காணொலியில் உள்ள சிலையின் புகைப்படத்துடன் bahujansahitya என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 22ஆம் தேதி தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதில், “கல்ப விக்ரஹா சிலையின் கதை 2015ஆம் ஆண்டு booksfact.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை சிலையின் தொன்மை பற்றி பல கூற்றுக்களை முன்வைத்தாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


bahujansahitya இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு

தொடர்ந்து, booksfact இணையதளத்தை ஆய்வு செய்கையில் அதில் பண்டைய கிரேக்கத்தில் USBயுடன் லேப்டாப் உபயோகித்ததாகவும், ராமாயண போர்களத்தில் பயன்படுத்தப்பட்ட ரோபாட் என்றும் உண்மைக்கு புறம்பான பல்வேறு கட்டுக்கதைகளை பதிவிட்டுள்ளனர். இவற்றின் மூலம் வைரலாகும் தகவலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிய வருகிறது.

மேலும், விகடன் ஊடகம் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடம் வைரலாகும் கல்ப விக்ரஹா குறித்து பேட்டியெடுத்து கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதில், “இதில் காணப்படும் அத்தனை தகவல்களுமே பொய்யான, தவறான கூற்றுகளாகும். வரலாற்று ரீதியான, விஞ்ஞானப்பூர்வமான எந்த ஓர் ஆதாரமும் காட்டப்படவில்லை.

இந்த சிலையின் கலையம்சத்தைப் பார்க்கும்போது, சமீபகாலமாக காசியில் விற்பனை செய்யப்படும் கலைப்பொருள்கள் போல் உள்ளன. 'தரா' என அழைக்கப்படும் மிகவும் மலிவான கலப்பு உலோகத்தால் செய்யப்பட்டு, தங்க மூலாம் அல்லது தங்க நிறத்திலான வண்ணம் பூசப்பட்ட கலைப்பொருள் இது. அதாவது நடப்பு நவீன காலத்தில் செய்யப்பட்ட கலைப்பொருள்.

இந்தச் சிலை 28,450 ஆண்டுகள் பழைமையானது என அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா கதிர்விச்சு ஆய்வகத்தில், ரேடியோ கார்பன் சி-14 ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக, வலைத்தள செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இது உண்மையாக இருந்தால், அதற்கான ஆய்வறிக்கையை வெளியிட்டிருப்பார்கள். அப்படி எந்த ஓர் ஆய்வறிக்கையும் வெளியிடப்படவில்லை” என்று விரிவாக பல்வேறு தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளது.


விகடன் வெளியிட்டுள்ள பேட்டி

Conclusion:

நம் தேடலின் முடிவாக 28,450 ஆண்டுகள் பழமையான சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் முற்றிலும் ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான தகவல் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:உலகத்திலேயே மிகப்பழைய சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இது பொய்யான தகவல் என்று வரலாற்று ஆய்வாளரே மறுத்துள்ளார்
Next Story