பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கும்பகர்ணனின் வாள் கிடைத்தது என்று AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சூழலில், “எவ்வளவுதான் இந்து மத அடையாளங்களை உலகம் முழுக்க அழித்து ஒழிக்க நினைத்தாலும் அதன் ஆதாரங்கள் தினம் தோறும் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது” என்ற கேப்ஷனுடன் தென்னாப்ரிக்காவின் சுத்வாரா என்ற குகையில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது என்று காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இவ்வாறான சிவலிங்கம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையைக் கண்டறிய அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, சுத்வாரா (Sutwara) என்ற பெயரில் தென்னாப்ரிக்காவில் குகையே இல்லை என்பது தெரியவந்தது. மாறாக, சுத்வாலா (Sutwala) என்ற பெயரில் இம்புமலாங்கா என்ற மாகாணத்தில் குகைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் சுத்வாலா குகையில் கண்டெடுக்கப்பட்டதா என்று அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மின்னஞ்சலுக்கு விளக்கம் கேட்டு நியூஸ் மீட்டர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தது. அதற்கு, இத்தகவல் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தென்னாப்ரிக்காவின் சுத்வாரா என்ற குகையில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.