ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி வரம்பு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், “ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது” என்ற தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் அவ்வாறான எந்த ஒரு வரியும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய கடைசியாக நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரி மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து தேடினோம். அப்போது, கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இது தொடர்பாக PIB செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், ஆணுறை தொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல் குறித்து தேடுகையில் India Fillings என்ற இணையதளம் இது தொடர்பாக தகவல் வெளியிட்டிருந்தது. அதில், கருத்தடை சாதனமும் இடம்பெற்றுள்ளது தெரியவந்தது. ஆணுறை கருத்தடை சாதனத்தில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவில் 28 சதவீதம் தான் உச்சபட்ச ஜிஎஸ்டி வரி வரம்பு என்பதும் நம் தேடலில் தெரிய வந்தது.
ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள கருத்தடை சாதனங்கள்
முடிவாக நம் தேடலில் ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் ஆணுறைக்கு ஜிஎஸ்டி வரியே கிடையாது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.