இந்தோனேஷியாவில் 7500 வருடங்களுக்கு முன்னர் நிறுவிய சிவாலயம் கண்டுபிடிக்கபட்டுள்ளது. கிறித்தவம், இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த இந்த சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டது என்று லிங்கம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில்(Archive link) வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ரெட்டிட் இணையதளத்தில் இந்தியாஸ்பீக்ஸ் என்ற பயனர், "வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேட் டியன் தொல்பொருள் தளத்தில் இந்த லிங்க-யோனி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தளம் தற்செயலாக 1985இல் கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளுக்குப் பிறகு இந்து நாகரிகம் 4 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை இருப்பதை வெளிப்படுத்தியது" என்று வைரலாகும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதனை அடிப்படையாகக்கொண்டு கூகுளில் தேடுகையில், வியட்நாம் பிளஸ் என்ற செய்தி நிறுவனம் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி புகைப்படத்துடன் வியட்நாமிய மொழியில் வெளியிட்டுள்ள கட்டுரையிலும் இதே செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக இதே தகவல் வியட்நாம் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
Conclusion:
இறுதியாக, நமது தேடலின் மூலம் இந்தோனேசியாவில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது. அப்புகைப்படம் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தது. மேலும், சிவலிங்கம் அமைந்திருக்கும் ஆலயப் பகுதி 4 முதல் 9ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டது என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.