தேங்கி நிற்கும் தண்ணீரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் திடீரென வாகனத்துடன் பள்ளத்தில் விழும் சிசிடிவி காட்சியுடன், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணைத்து வலதுசாரியினர் மற்றும் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் மூலம் தம்பதியினர் பள்ளத்தில் விழக்கூடிய சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்நிலையில், பகிரப்பட்டு வரும் சிசிடிவி காட்சியின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக காணொலியின் ஒரு குறிப்பிட்ட காட்சியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கடந்த ஜுலை மாதம் அம்மாநிலக் காவலர் தயானந்த் சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திறந்துகிடந்த வாய்க்காலில் மழைநீர் தேங்கி நின்றது. இதனை அறியாத தம்பதியினர், இருசக்கர வாகனத்துடன் வாய்க்காலிற்குள் விழுந்துள்ளனர். இதில், இருவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். இது ஸ்க்ரால், இந்தியா டுடே, என்டிடிவி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகி உள்ளது.
Conclusion:
இறுதியாக, நமது தேடலின் மூலம் தம்பதியினர் பள்ளத்தில் விழக்கூடிய சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றது போன்று சமூக வலைதளங்களில் வலதுசாரியினர் மற்றும் அதிமுகவினர் பரப்பி வரும் சிசிடிவி காட்சி உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.