"பெண்கள் போல் வேடமிட்டு அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடக் கொடுப்பார்கள் சாப்பிட்டவர் மயக்கமுற்றவுடன் அவர்கள் தங்கள் ஆட்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்சை வரவழித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் நடிப்பார்கள் இதுதான் அவர்களின் திட்டம். ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் உள்ளன....... பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு குழுவிற்கும் பகிரவும்." என்ற கேப்ஷனுடன் 2 நிமிடம் 59 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஆண் ஒருவர் பெண்ணைப் போன்று முக்காடு அணிந்து முகக்கவசத்துடன் இருப்பது பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, English NEWJ என்ற ஊடகம், "டெல்லியில் இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடமணிந்த ஆண்" என்ற கேப்ஷனுடன் 2022ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
English NewJ வெளியிட்டுள்ள செய்தி
தொடர்ந்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் தேடுகையில், அமர்உஜாலா ஊடகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, "பணத்தை மிச்சப்படுத்துவதற்காக பெண்ணைப் போன்று முக்காடு அணிந்து டெல்லி பேருந்தில் பயணித்த ஆண் ஒருவரை பேருந்து நடத்துனர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். பேருந்தில் அமர்ந்திருப்பவர் ஆண் என்பதை கண்டுபிடித்த நடத்துனர் அவரது முகக் கவசத்தை கழட்டும்படி கூறியுள்ளார். ஆனால், அந்த நபரோ கழட்டாமல் பெண்ணை போன்று பேசியுள்ளார்.
முகக் கவசத்தைக் கழட்டாவிட்டால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிடுவேன் என்று நடத்துனர் கூறியதும் அந்த நபர் உடனடியாக முக்காடு மற்றும் முகக் கவசத்தைக் கழட்டினார். இறுதியாக, அவர் ஆண் தான் என்பது தெரியவந்தது. கெஜ்ரிவால் அரசாங்கம் 2019ஆம் ஆண்டு முதல் டெல்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது" என்று கூறப்பட்டுள்ளது. இதே செய்தி நியூஸ் 18 பஞ்சாபிலும் வெளியாகியுள்ளது.
Conclusion:
நமது தேடலில் முடிவாக பெண்களைப் போன்று வேடமிட்ட ஆண்கள் பேருந்தில் பயணிக்கும் பெண்களைக் கடத்துவதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் உண்மையில் பேருந்தில் இலவசமாகப் பயணிப்பதற்காக ஆண் ஒருவர் பெண்ணைப் போன்று வேடமிட்டிருந்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.