நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்டில் அதிகப்படியான நிகோடின் உள்ளதா?
நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்டில் 18 மில்லி கிராம் வரை நிகோடின் உள்ளது என்றும் அதனைக் கொண்டு ஒரு முறை பல் துலக்கினால் ஒன்பது சிகரெட் பிடித்ததற்குச் சமம் என்ற தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.
By Ahamed Ali Published on 27 Oct 2022 11:30 AM GMT"ஒரு சிகரெட்டில் 2 முதல் 3 மில்லி கிராம் வரை நிகோடின் இருக்கிறது. நமது பேஸ்ட்டில் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? உச்சபட்சமாக 18 மில்லி கிராம் வரை நிகோடின் இருக்கிறது. அதாவது, ஒரு முறை பல் துலக்கினால் ஒன்பது சிகரெட் பிடித்ததற்குச் சமம்" என்ற தகவலுடன் கூடிய புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.
பகிரப்பட்டு வரும் புகைப்படம்
Fact-check:
இத்தகவலின் உண்மைத் தன்மையைக் கண்டறிய கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, டெல்லி மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் (DIPSAR- Delhi Institute of Pharmaceutical Sciences and Research) சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் நடத்திய ஆய்வு குறித்த செய்தியை இந்தியா டுடே வெளியிட்டு இருந்தது. அதன்படி, பல டூத்பேஸ்ட் உற்பத்தியாளர்கள் அதிக அளவிலான நிகோடினை டூத்பேஸ்ட்கள் மற்றும் டூத் பவுடர்களில் கலப்படம் செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
"2011-ம் ஆண்டில் ஆய்வு செய்யப்பட்ட 24 டூத்பேஸ்ட் பிராண்டுகளின், கோல்கேட் ஹெர்பல்(Colgate Herbal), ஹிமாலயா(Himalaya), நீம் பேஸ்ட்(Neem Paste), நீம் துளசி(Neem Tulasi), ஆர்.ஏ. தெர்மோசீல்(RA Thermoseal), சென்சோஃபார்ம்(Sensoform) மற்றும் ஸ்டோலைன்(Stoline) ஆகிய ஏழு பிராண்டுகளில் நிகோடின் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என்று டெல்லி மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.எஸ். அகர்வால் கூறியுள்ளார்.
மேலும், "மூலிகை தயாரிப்புகளான கோல்கேட் ஹெர்பல்(Colgate Herbal) மற்றும் நீம் துளசி(Neem Tulasi) ஆகியவறறில் வியக்கத்தக்க வகையில் 18 மற்றும் 10 மில்லிகிராம் அளவிலான நிகோடின் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது ஒன்பது முதல் ஐந்து சிகரெட்டுகளில் காணப்படும் நிகோடின் அளவிற்கு சமம்" என்று கூறியுள்ளார்.
"10 பிராண்டு டூத்பவுடர்களை ஆய்வு செய்ததில், டாபர் ரெட்(Dabur red), விக்கோ(Vicco), முசாகா குல்(Musaka Gul), பயோகில்(Payokil), உனடென்ட்(Yunadent) மற்றும் அல்கா டான்ட்மன்ஜன்(Alka Dant Manjans) ஆகிய 6 பிராண்ட்களில் நிகோடின் இருப்பது கண்டறியப்பட்டது. பயோகில்(Payokil) பிராண்ட் டூத்பவுடரில் அதிகபட்சமாக 16 மில்லிகிராம் நிகோடின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு நபர் எட்டு சிகரெட் புகைப்பதற்கு சமம்," என்கிறார் பேராசிரியர் எஸ்.எஸ். அகர்வால்.
மேலும் இந்த ஆய்வு உண்மையாகவே நடத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆய்வு குறித்து தேடினோம். அப்போது, இந்த ஆய்வறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான உயிரி தொழில்நுட்பவியல் தகவலுக்கான தேசிய மையத்தின்(NCBI- National Centre for Biological Information) இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
Conclusion:
இறுதியாக நம் தேடலில் முடிவில், "நாம் பயன்படுத்தும் பேஸ்ட்டில் உச்சபட்சமாக 18 மில்லிகிராம் வரை நிகோடின் இருக்கிறது" என்றும், "ஒரு முறை பல் துலக்கினால் ஒன்பது சிகரெட் பிடித்ததற்குச் சமம்" என்று பொத்தாம் பொதுவாக பரப்பப்படும் தகவலால், நாம் பயன்படுத்தும் அனைத்து பேஸ்டிலும் நிகோடின் இருப்பது போன்ற ஒரு தவறான புரிதல் ஏற்படுகிறது. ஆனால், ஆய்வின்படி குறிப்பிட்ட சில பிராண்டு டூத்பேஸ்ட்கள் மற்றும் டூத்பவுடர்களில் மட்டுமே நிகோடின் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவற்றை பயன்படுத்தினால் ஐந்து முதல் ஒன்பது சிகரெட் பிடித்ததற்கு சமம் என்பது ஆய்வின் படி நிரூபிக்கப்பட்டுள்ளது.