Fact Check: அனைத்து இந்துக்களையும் இஸ்லாமியர்களாக மாற்றுவோம் என்று மேடை போட்டு கூறினாரா இஸ்லாமியர்?
இஸ்லாமியர் ஒருவர் இந்துக்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றுவோம் என்று கூறியதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 22 Sept 2024 10:42 PM ISTClaim: இந்துக்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றுவோம் என்று கூறிய இஸ்லாமியர்
Fact: இத்தகவல் தவறானது. உண்மையில் இது ஒடிசாவில் நடைபெற்ற ஜாத்ரா மேடை நாடகத்தின் ஒரு காட்சி
“கூடிய விரைவில் அனைத்து ஹிந்து மக்களையும் முஸ்லீம் மக்களாக மாற்றுவோம் என்று ஒரு துலுக்கன் மேடை போட்டு சொன்னதற்கு, எகிறி குதித்து வந்து உதைத்த உக்கிர நரசிம்மர். இப்படியிருக்கனும் ஒவ்வொரு இந்துவும்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இஸ்லாமியர் ஒருவர் மேடையில் அனைத்து இந்துக்களையும் முஸ்லீமாக மாற்ற வேண்டும் என்று கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த இந்து ஒருவர் அவரைத் தாக்கியதாகவும் கூறி இதனை பகிர்ந்து வருகின்றனர்.
வைரலாகும் பதிவு
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்பது தெரியவந்தது. இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, san_x_m என்ற எக்ஸ் பயனர், “ஒடிசாவில் நடந்த ஜாத்ரா எனும் நாடகத்தின் காட்சி இது. நடிகர் பேசும் வசனம் உண்மை என்று நினைத்து நடிகரை பார்வையாளர் ஒருவர் தாக்கினர். இங்கு கலகக்காரர்களின் தலையீடு இல்லை” என்று வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளார்.
கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி Kalinga TV இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “ஸ்வர்ண மஹால் ஜாத்ரா நாடகக் கலைஞர்கள் ஜாத்ரா மேடையில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘Swami Pain Pachhe Narkaku Jibi’ என்ற ஜாத்ரா நாடகம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர்களில் இருந்த இளைஞர் ஒருவர் பந்தல் மீது ஏறி, அங்கிருந்த கலைஞர் ஒருவரை அடிக்கத் தொடங்கினார். ‘மதம் மாற்றம்’ தொடர்பான காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Odisha TV என்ற ஊடகமும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஜாத்ரா நாடகக் குழுவினரை தொடர்புகொண்டது நியூஸ் மீட்டர். அதற்கு, இந்துவான நபா கோஷ், முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான நிலப்பிரச்சனையை மையமாகக் கொண்ட ஒரு நாடகத்தில் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், கதையில் நிலப்பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குறிப்பிட்ட அந்த நிலம் ஒடிசாவில் உள்ள ஜெகன்னாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. கதையில் வரும் முஸ்லீம் கதாபாத்திரம் கோவிலின் பூசாரியைத் துன்புறுத்தி அவரது மகளைக் கடத்துகிறது.
இது குறித்து கோஷ் விளக்குகையில், “நாடகத்தின் ஒரு காட்சியில், முஸ்லீம் கதாப்பாத்திரம் இந்துக்களுக்கு அசைவ உணவைப் பரிமாறி இந்துக்களை இஸ்லாத்திற்கு மாற்றுவேன் என்று கூறி எரிச்சலூட்டும் கருத்துக்களைக் கூறும். இந்த ஆத்திரமூட்டும் கருத்துக்கள் பார்வையாளர்களிடமிருந்து வலுவான எதிர்வினையை ஏற்படுத்துகின்றன, இதனால் கோபமடைந்து பாட்டில்களை வீசத் தொடங்குகிறார்கள். ஒரு கட்டத்தில், பார்வையாளர்களில் ஒருவர் மேடைக்கு விரைந்து வந்து முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரைத் தாக்குகிறார்” என்று கூறுகிறார்.
Conclusion:
நம் தேடலின் முடிவில் அனைத்து இந்துக்களையும் இஸ்லாமியர்களாக மாற்றுவோம் என்று இஸ்லாமியர் மேடை போட்டு கூறியதாக வைரலாகும் காணொலி மற்றும் தகவல் உண்மையில் ஒடிசாவில் நடைபெற்ற ஜாத்ரா நாடகத்தின் ஒரு காட்சியே தவிற உண்மையான கருத்து கிடையாது. மேலும், அதில் இஸ்லாமியராக நடித்தவரும் இந்து என்பது குறிப்பிடத்தக்கது.