ஒரு பக்கம் நிலவிற்கு சென்ற நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் புகைப்படமும், மறு பக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் வைத்து அதில், "நிலவிற்குச் சென்று வந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கே 5 புகைப்படம் தான் எடுத்துக்கொண்டார். ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கழிவறைக்குச் சென்றதற்கே 37 புகைப்படங்களை எடுத்துள்ளார்(ஆங்கில மொழிபெயர்ப்பு)" என ஒரு புகைப்படம் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை திமுகவைச் சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
இந்நிலையில், அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய, வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் கொண்டு ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, ஃப்ரீ பிரஸ் ஜர்னல்(Free Press Journal) செய்தி நிறுவனம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி குருத்துவாராவில் பிரதமர் மோடி தனது கைகளைக் கழுவிக்கொள்வது போன்ற புகைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவற்றின் மூலம் வைரலாகி வரும் புகைப்படம் பிரதமர் மோடி குருத்துவாரா சென்றபோது எடுக்கப்பட்டது என்பதைக் கூற முடிகிறது. மேலும், குருத்துவாரா செல்லும் அனைவரும் தங்களுடைய கை, கால்களைக் கழுவுவது வழக்கம். அதையே, பிரதமர் மோடியும் செய்துள்ளார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், இதனை உறுதிபடுத்த பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தேடினோம். அதில், கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி குருத்துவாரா, ராகப் காஞ் சாகிப்(Rakab Ganj Sahib) எனும் இடத்திற்குப் பிரதமர் மோடி சென்றதாக அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பதிவிலும், தற்போது வைரலாகும் புகைப்படத்திலும் பிரதமர் நரேந்திர மோடியின் முகக்கவசம் மற்றும் ஆடைகள் ஒரே மாதிரி இருப்பதை நம்மால் கான முடிகிறது.
Conclusion:
இறுதியாக, பிரதமர் மோடி குருத்துவாரா செல்லும் முன் கை கழுவிய புகைப்படத்தைக், கழிவறைக்குச் சென்ற போதும் கூட புகைப்படங்களை எடுத்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது. எனவே, கழிவறையில் கூட கேமராமேனை அழைத்துச் சென்று 37 புகைப்படங்கள் எடுப்பதாகப் பரவி வரும் பதிவு தவறானது. அந்த புகைப்படம் 2020ல் குருத்துவாரா சென்ற போது எடுக்கப்பட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக கூற முடிகிறது.