காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் புதிய திட்ட அலுவலகம் கட்டப்பட்டது. இதனை சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்நிலையில், அப்புதிய கட்டிடத்தில் உள்ள ஒரு கழிவறையில் அடுத்தடுத்து இரு கழிவறைக் கோப்பைகள் மறைவின்றி அமைக்கப்பட்டதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று பரவியது. இதனை சமயம் தமிழ், ஏபிபி நாடு, தந்தி டிவி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் செய்தியாகவும், நியூஸ் கார்டாகவும் வெளியிட்டு இருந்தன. தொடர்ந்து, இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக சமூக வலைதளங்களில் இது குறித்து தேடினோம். அப்போது, "இறுதிகட்ட வேலைகள் முடியும் முன்பு எடுக்கப்பட்ட படம் அது. Divider(டிவைடர்) பொருத்தும் பணிகள் நடைபெறுகின்றன" என்று சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், இது தொடர்பாக பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, "அலுவலக கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அந்த இரு கழிவறைக்கு இடையே தடுப்புச் சுவர் ஏற்படுத்தப்படும். அப்போது, தான் அது இரண்டு கழிவறைகளாக முழுமை பெறும்" என்று விளக்கம் அளித்து இருந்தார். இது செய்தியாகவும் வெளியாகி இருந்தது.
தொடர்ந்து, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பலரும் புதிய புகைப்படம் ஒன்றையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில், கழிப்பறைகள் டிவைடர் வைத்துப் பிரிக்கப்பட்டு, கதவுகளும் வைக்கப்பட்டு உள்ளது.
Conclusion:
இறுதியாக நம்முடைய தேடலில், அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் கழிவறை முழுமையாக கட்டி முடிக்கப்படும் முன்பாகவே, இரு கழிவறைகளும் மறைவின்றி ஒன்றாக இருக்கக்கூடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.