"மம்தா பேகம் அடங்கிப் போவதன் மர்மம் ஒவ்வொன்றாக வெளி வருகிறது… இது ஒரு மந்திரியோட கார் டிரைவர் வீட்டுல பீரோ... ! டிரைவர் வீட்டு பீரோவே இப்படினா அப்போ ஓனர்???" என்று குறிப்பிட்டு ஒரு கப்போர்ட்டில் பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலதுசாரியினர் பரப்பி வருகின்றனர். மேலும், அவை மேற்கு வங்க அமைச்சரின் கார் ஓட்டுநர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் என்று குறிப்பிட்டுள்ளனர். முதல்வர் மம்தா பானர்ஜியை வலதுசாரியினர் 'மம்தா பேகம்' என்று அழைத்து வருகின்றனர். அதனையே இப்பதிவிலும் பயன்படுத்தி இருப்பதை நம்மால் காண முடிகிறது.
கப்போர்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம்
Fact-check:
இந்நிலையில், பகிரப்பட்டு வரும் இத்தகவலின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். "கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று ஹைதராபாத்தில் உள்ள ஹெட்டேரோ பார்மசி(Hetero Pharmaceutical Group) நிறுவனத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ. 550 கோடி வருமானத்தைக் கண்டறிந்து, ரூ. 142 கோடிக்கும் அதிகமான பணத்தைக் வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்." என்ற செய்தியை தி நியூஸ் மினிட், டைம்ஸ் நவ், ஏபிபி, இந்தியா டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளனர். சோதனையின் போது கண்டெடுக்கப்பட்ட பணம் என்று கப்போர்ட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தின் புகைப்படமும் செய்தியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், சமீபத்தில் மேற்கு வங்கத்தில் ஏதேனும் அரசுத்துறை சார்ந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதா என்பதை தேடினோம். அப்போது, கடந்த ஜூலை 22-ம் தேதி மாநிலப் பள்ளிக் கல்வித்துறையில் ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மேற்கு வங்கத் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் கல்வித் துறை இணை அமைச்சர் பரேஷ் சந்திர ஆதிகாரி ஆகியோரின் வீடுகள் உட்பட பல இடங்களில் அமலாக்கத்துறையினர் (Enforcement Directorate) சோதனை நடத்தி இருப்பது தெரிய வந்தது.
Conclusion:
நமது தேடலில் கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கு வங்க அமைச்சர் ஒருவரின் கார் ஓட்டுநர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பணம் என்று வலதுசாரியினர் பரப்பும் புகைப்படம் தவறானது. மேலும், அது ஹைதராபாத்தைச் சேர்ந்த பார்மசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை நம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.