"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டது. சர்வாதிகாரியின் 10ம் வகுப்பு பெயில் மார்க் ஸீட்" என்று குறிப்பிட்டு "தமிழ் 22, ஆங்கிலம் 18, கணிதம் 33, அறிவியல் 41, வரலாறு 39. ஆக டென்த் ல பெயிலா…" என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்துடன் அவர் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் என்று பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. "ஒழுங்கீனமாக நடந்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்" என உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், அவரை சர்வாதிகாரி என்று குறிப்பிட்டு இப்பதிவு வலம் வருகிறது.
Fact-check:
இது குறித்து உண்மைத்தன்மையைக் கண்டறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் ஆர்டிஐயின் மூலம் கேட்கப்பட்டு உள்ளதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்த போது, அப்படி எந்த ஒரு ஆர்ட்டியை தகவலும் பெறப்படவில்லை என்பது தெரிய வந்தத.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டு "ஸ்டாலின் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஜகவினர் கேட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில்" என்று பாலிமர் நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகியுள்ளது. வைரலான அந்த நியூஸ் கார்டும் போலியானது என்று ஏற்கனவே சில உண்மை சரிபார்க்கும் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து Fact Crescendo ஊடகம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் தரப்பில் விளக்கம் கேட்டது. அதற்கு, “மு.க.ஸ்டாலின் மதிப்பெண் பட்டியல் தரும்படி ஆர்.டி.ஐ-யில் யாரும் கேட்கவில்லை. அப்படியே மூன்றாவது நபர் கேட்கும்போது எல்லாம் தகவல் அளிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நபர், அவர் சார்ந்த பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் விண்ணப்பித்தால், தகுதி இருப்பின் அது பற்றி பரிசீலனை செய்து வழங்கப்படும். சம்பந்தமே இல்லாத ஒருவர் மற்றொருவரின் மதிப்பெண் பட்டியல் வேண்டும் என்று கேட்டால் அதை எல்லாம் நாங்கள் கொடுப்பது இல்லை” என்றனர்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கப்பட்ட உறுதிமொழி பத்திரத்தின்படி, மு.க.ஸ்டாலின் சென்னை மாநில கல்லூரியில் 1973ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
Conclusion:
நமது தேடலின் மூலம், தற்போது மு.க. ஸ்டாலினின் மதிப்பெண் என்று பேஸ்புக்கில் வைரலாகும் இந்த புகைப்படத்தில் இருக்கக்கூடிய மதிப்பெண்கள் போலியானது என்றும், அடிப்படை ஆதாரமற்றவை என்றும் நிரூபிக்க முடிகிறது.