"இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் தின்னுருக்கேன், நீ எத்தனை தின்னுருக்கே!" என்று ஒரு கழுதை மற்றொரு கழுதையைப் பார்த்து கேட்பது போன்ற துக்ளக் இதழின் அட்டப்படத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும், "RSSயை சேர்ந்த குருமூர்த்தி நிர்வகிக்கும், துக்ளக் இதழில் அண்ணாமலையை கழுதையாக சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தை அட்டைப்படமாக வெளியிட்டுள்ளார். பாஜகவின் மாநிலத் தலைவரை பாஜகவை சேர்ந்தவரே கழுதையாக சித்தரித்து சொந்த கட்சிக்காரனுக்கே சூனியம் வைக்க அவர் பிராமணர் அல்லாதவர் என்பதே காரணம். இது பல கழுதைகளுக்கு புரிவதில்லை" என்றும் படத்தின் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact-check:
மதுரை, விளாச்சேரியில் உள்ள மகளிர் கலைக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கடந்த மார்ச் மாதம் கலந்து கொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தான் இது வரையில் 20,000 புத்தகங்கள் படித்திருப்பதாகக்" கூறினார். இப்படிப் பேசியதைத் தொடர்ந்து துக்ளக் இதழ் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கழுதை போன்று சித்தரித்து கேலிச்சித்திரம் ஒன்றை அட்டைப்படத்தில் வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் இப்படம் பரப்பப்படுகிறது.
இரு தேதிகளில் வெளியான கேலிச்சித்திரம்
இந்நிலையில், பகிரப்பட்டு வரும் இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய முதலில் புகைப்படத்தை போட்டோ போரன்சிக்(Photo forensic) முறையில் பரிசோதித்தோம். அதன்படி, புகைப்படத்தின் எழுத்துப் பகுதி எடிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த அட்டைப் படத்தில் "11.11.2020" என்ற தேதி இருப்பதைக் காண முடிகிறது. தொடர்ந்து, அந்த தேதியில் வெளியான துக்ளக் இதழின் அட்டைப்படம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைத்தது. அந்த தேதியிட்ட இதழின் அட்டைப்படத்தில், பாஜகவின் அன்றைய மாநிலத் தலைவர் எல். முருகனின் கைது குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பேசிக்கொள்வது போன்ற கேலிச்சித்திரமே வெளியிடப்பட்டிருந்தது.
துக்ளக் இதழின் அதிகாரப்பூர்வ இணையதளம்
மேலும், 2020-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி துக்ளக் வெளியிட்டிருந்த அட்டைப்படத்தில் தற்போது வைரலாகும் அதே கழுதையின் கேலிச்சித்திரம் இருந்தது. ஆனால் அதிலும், "நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது சந்தேகமே" என்ற செய்தி குறித்து ஒரு கழுதை மற்றொரு கழுதையைப் பார்த்து, "சரிவிடு, இது உண்மையா இருந்தா நம்ம கூட்டத்தைச் சேர்ந்த ஒருத்தருடைய ஆட்சிதான் வரும். நமக்கு தீனிக்குப் பஞ்சம் இருக்காது." என்று பேசுவது போன்று தான் உள்ளது.
Conclusion:
இறுதியாக, நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், பாஜக தலைவர் அண்ணாமலை 20,000 புத்தகங்கள் படித்ததாகப் பேசியது குறித்து, துக்ளக் இதழ் அண்ணாமலையை கழுதை போல சித்தரித்து பரவும் கேலிச்சித்திரம் எடிட் செய்யப்பட்டது என்று அறிய முடிகிறது. மேலும், அது உண்மை அல்ல.