"திருமதி நிர்மலா சீதாராமனின் மகள் இப்போது இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமாக உள்ளார்.. நமது தேசத்திற்கு சேவை செய்கிறார்.. அவர் எம்எல்ஏ அல்லது எம்எல்சி ஆக ஆசைப்படவில்லை" என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பெண் ராணுவ அதிகாரியுடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் ஹியூலாங் பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் புகைப்படத் தொகுப்பை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உள்ள பெண் ராணுவ வீராங்கனை ஒருவர் நிர்மலா சீதாராமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்ணின் சீருடையில் 'நிகிதா' என்று பொயர் எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் மகள் யார் என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தி ஒன்று கிடைத்தது. அதில், "மத்திய நிதியமைச்சர் தனது 2020-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில், நிர்மலா சீதாராமனின் மகள் வங்மாயி பரகலா மற்றும் உறவினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்" என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதன் மூலம் நிர்மலா சீதாராமனின் மகள் பெயர் நிகிதா இல்லை என்பது உறுதியாகிறது.
நிர்மலா சீதாராமன் மகள் வங்மாயி பரகலா
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளரான பாரத் பூஷன் பாபு, "தெளிவுபடுத்தல்: பாதுகாப்புத்துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது அவருக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராணுவ அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க எடுக்கப்பட்ட புகைப்படம் இது. சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது போல அவர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் மகள் அல்ல" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் மூலம் கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் ராணுவத்தில் உள்ளார் என்று வலதுசாரியினர் பகிர்ந்து வரும் புகைப்படம் வதந்தி என்பதை நிரூபிக்க முடிகிறது.